ஜெயம் ரவி நடிப்பில் லக்ஷ்மன் இயக்கியுள்ள திரைப்படம் பூமி. ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நிதி அகர்வால், சரண்யா, ரோனிட் ராய், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நாசாவில் பணிபுரிந்து மார்ஸ்-ல் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியில் இருக்கும் ஜெயம் ரவி, தனது சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு உள்ளூர் விவசாயிகள் படும் தவிப்பையும், அதன் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் சதியையும் அறிந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். முடிவில் வில்லன் கூட்டத்திடம் இருந்து விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் நேரும் ஆபத்து என்ன.?? அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார்.?? என்பதே பூமி படத்தின் மீதி கதை.
ஹீரோ பூமி நாதனாக ஜெயம் ரவி, தனது வழக்கமான நடிப்பை நிறைவாக கொடுத்து க்ளாப்ஸ் வாங்குகிறார். விவசாயிகள் துன்பம் கண்டு கலங்கும் போதும், உத்வேகத்துடன் செயல்படும்போதும் துடிப்பான நடிப்பை கொடுத்து பூமிநாதனுக்கு உயிர் கொடுக்கிறார். பாடல் காட்சிகளிலும் புரட்சியாக பேசும் காட்சிகளிலும் இருவேறு முகம் காட்டி ரசிக்க வைக்கிறார்.
நாயகி நிதி அகர்வாலுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம். முதல் பாதியில் வந்து போகிறவர் பாடல் காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். அம்மாவாக வரும் சரண்யாவுக்கும் கனமான கதாபாத்திரத்திம் அமையாமல் போயிருக்கிறது. வில்லன் ரோனித் ராயும் வழக்கமாக காட்டப்படும் கார்ப்பரேட் வில்லனாக வசனம் பேசிவிட்டு போகிறார்.
விவசாயத்தை காக்கும் பொருட்டு பேசுவது என ஆன நிலையில், அதை மேம்போக்காக அனுகாமல் சில ஆராய்ச்சிகளுடன் சொல்ல முயற்சித்திருப்பது சிறப்பு. வசனங்களும் கூட சரியாக ஆராய்ந்து அமைக்கப்பட்டிருப்பது பலம். ஆனால், அதுவே ஆங்காங்கே பிரச்சார நெடியை கொடுப்பது நெருடலாக அமைகிறது. விவசாயம் vs கார்பரேட்கள் என்ற சலித்து துவைக்கப்பட்ட களத்தில் இன்னும் கொஞ்சம் புதுமை காட்ட முயற்சித்திருக்கலாம்.