டிரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சித்தார்த், கேத்ரின் தெரஸா, சதீஷ், கபீர் சிங் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'அருவம்'. இந்த படத்தை சாய் சேகர் எழுதி இயக்கியுள்ளார்.
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகரியான சித்தார்த், தனது நேர்மையான நடவடிக்கைகளால் அவருக்கு ஆபத்து நேர்கிறது. பின்னர் தனது காதலியான கேத்ரீன் தெரஸா உதவியுடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதே இந்த படத்தின் கதை.
வாசனையை வைத்தே பொருட்களை தரத்தை அறியும் நேர்மையான உணவுத்துறை அதிகாரியாக சித்தார்த் தனது நேர்த்தியான நடிப்பால் அந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சித்தார்த்திற்கு நேர்மாறாக எந்த வாசனையையும் நுகரமுடியாத வித்தியாசமான குறைபாடுடைய பள்ளி ஆசிரியையாக கேத்ரீன் தெரஸா, கதையில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் தனது ஒன்லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் சதீஷ்.
தனது வில்லனத்தனத்தால் மிரட்டுகிறார் கபீர் சிங். மேலும், மதுசூதனன், ஆடுகளம் நரேன், சில்வா மாஸ்டர், மனோபாலா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேடங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஹாரர் படத்துக்கு தேவையான மிரட்டலான இசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். தனது வித்தியாசமான கோணங்களால் தன் பங்கிற்கு திகிலூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படங்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து சித்தார்த் நடவடிக்கை எடுக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. மேலும் கலப்படப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக சொல்லப்பட்டிருந்தது.
எந்த வாசனையும் நுகரமுடியாத கேத்ரீன் தெரஸாவின் குறைபாட்டை விளக்குவதற்கு முதல் பாதியில் அதிக காட்சிகள் இருக்கிறது. அதனை திரைக்கதையில் பெரிதும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. படத்தின் கதைக்குள் செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் முன்பே யூகிக்கக் கூடிய திரைக்கதையால் படத்தின் சுவாரஸியம் குறைகிறது. உணவுப் பொருட்களின் கலப்படம் பற்றி சொல்லப்பட்டிருந்தும் வெறும் பழிவாங்கும் படமாக இருந்தது சற்று ஏமாற்றமளித்தது.