இயக்குநர் அட்லியின் A for Apple நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'அந்தகாரம்'. அறிமுக இயக்குநர் வி.விக்னராஜன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
கண் பார்வை இல்லாமல் இறந்து போன ஆன்மாக்களுடன் பேசும் திறன் பெற்ற வினோத் கிஷன், தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்து டிப்ரஷனில் சிக்கி தவிக்கும் அர்ஜுன் தாஸ், கோமாவில் இருந்து மீண்டு வந்த மனநல மருத்துவர் குமார் நடராஜன். இந்த மூவருக்கும் இருக்கும் தொடர்பு என்ன..? அது எப்படி அவர்களை இணைக்கிறது..? அந்த புள்ளிகள் என்ன..? என்பதை இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையே ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக சொல்ல முயற்சித்திருக்கும் கதையே அந்தகாரம்.
அர்ஜுன் தாஸ் - வினோத் கிஷன் இருவருமே தங்களின் நடிப்பால், படத்துக்கு போதிய பலம் சேர்த்து அட்டகாசம் செய்கிறார்கள். மனச்சோர்வுக்கு தள்ளப்பட்ட இளைஞனாக, படம் முழுவதும் தனது சரவெடி குரலால் மிரட்டுகிறார் அர்ஜுன் தாஸ். அவரின் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது. பெரிதான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், கண் பார்வையற்றவராக தனது மேனரிசங்களில் இன்னொருபக்கம் ஸ்கோர் செய்கிறார் வினோத் கிஷன். இருவருமே அவர்களின் நடிப்பின் மூலம் நம்பிக்கையளிக்கின்றனர்.
கொஞ்சம் காலத்திற்கு பிறகு பூஜா ராமச்சந்திரன் மீண்டும் திரையில் தோன்றி ரசிக்க வைக்கிறார். மனநல மருத்துவராக வரும் குமார் நடராஜனும் முடிந்தளவுக்கு மிரட்டலுக்கு கேரண்டி கொடுக்கிறார். மற்ற துணை நடிகர்கள் யாவரும், இக்கதைக்கு தேவையான நடிப்பை சரியான விகிதத்தில் கொடுத்து செல்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய தூணாக நின்று வேலை பார்த்து இருக்கிறது தொழில்நுட்ப குழு. ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் கேமரா, ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்து பார்த்து வடித்துள்ளது. அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நின்று விளையாடுகிறது சத்யராஜ் நடராஜனின் எடிட்டிங். பிரதீப் குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் இந்த வகை படங்களுக்கே உரிய விதத்தில் அமைந்துள்ளது. கதை சொல்லியாக பயணிக்கும் டெலிபோன் முதல் சுவற்றில் தொங்கும் போட்டோ வரை, கச்சிதம் காட்டியிருக்கும் ஆர்ட் டைரக்ஷன் டீமை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
இது போன்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படங்கள் எப்போதுமே கத்தி மேல் நடக்கும் கதைதான். கொஞ்சம் பிசகினாலும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் மாறிவிடும். அப்படியிருக்க, முதல் படத்திலேயே அதில் புதுமையும் காட்டி லைக்ஸ் வாங்குகிறார் இயக்குநர் விக்னராஜன். மேலும் நடிகர்களிடம் இருந்தும் மற்ற டிப்பார்ட்மெட்களிடம் இருந்தும் நேர்த்தியான வேலை வாங்கிய விதத்தில், அறிமுகத்திலேயே நம்பிக்கையும் அளிக்கிறார் இயக்குநர்.
ஒவ்வொருவருக்கும் இடையில் இருக்கும் மர்மங்களும் முடிச்சுகளும் ஒரு கட்டத்தை தாண்டியும் முடிவில்லாமல் போய் கொண்டிருப்பது படத்தின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது. சுமார் மூன்று மணி நேர நீளமும், அவசரமாக முடிக்கப்பட்ட க்ளைமாக்ஸும் மட்டுமே குறையாக தெரிகிறது.