நயன்தாரா, கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஐரா'. சுவாரஸியமில்லாத வேலை, கட்டாய திருமணம் இவற்றில் இருந்து தப்பிக்க, யாருக்கும் தெரியாமல் பாட்டி வீட்டிற்கு வருகிறார் நயன்தாரா. அங்கே பாட்டி வீட்டில் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன.
மற்றொருபுறம் தன் காதலியை இழந்து வாடும் கலையரசன், தான் தேடிச் செல்லும் ஒவ்வொருவரும் ஒரே மாதிரி மரணமடைவதால் குழப்பமடைகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த படத்தின் கதை.
இந்த உலகத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்கிற Butterfly Effect அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் திரைக்கதை சுவாரஸியத்தை தருகிறது.
படத்தில் யமுனா, பவானி என நயன்தாராவுக்கு இரட்டை வேடம். யமுனா என்கிற நவநாகரிக பெண்ணாகவும், பவானி என்கிற கிராமத்து பெண்ணாகவும் நடிப்பில் தனது மற்றொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். காதலியை பரிகொடுத்துவிட்டு அதன் துக்கம் ஒருபுறம், அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளால் ஏற்படும் மிரட்சி மறுபுறம் என தனது கதாப்பாத்திரத்தின் தேவையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் கலையரசன்.
படத்தில் கண் தெரியாத நயன்தாராவின் பாட்டிக்கும், காது கேளாதவராக வரும் யோகிபாபுவுக்கும் இடையேயான காட்சிகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. கலையரசன் மற்றும் நயன்தாராவின் சிறுவயது வேடத்தில் நடித்திருக்கும் மாத்தேவனும் கேப்ரியலும் தாங்கள் இந்த வேடத்துக்கான சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்கள்.
இன்னமும் நம் கிராமங்களில் நிலவும் சில மூடநம்பிக்கைகள் ஒருவரின் வாழ்வை எந்த அளவுக்கு சிதைக்கிறது என்பதை மிகவும் ஆனித்தரமாகவும், அதே நேரத்தில் உணர்வுப்பூர்வமாகவும் பேசியிருக்கிறது இந்த படம்.
பேய் படத்துக்கான திகிலூட்டும் காட்சிகள் பிளாஸ்பேக் காட்சிகள் என இரண்டு வெவ்வேறுவிதமான கலர் டோனில் சிறப்பான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீநிவாசன். படத்துக்கான ஆன்மா இசை தான் என்று சொல்லும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ்.
அமானுஷ்யங்கள், தொடர் மரணங்கள் என நகரும் படத்தில் அதற்கான பின்னணியில் அவ்வளவு அழுத்தம் இல்லை. கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கை, அதனால் ஒருவரின் வாழ்வு எவ்வாறு பாதிக்கிறது என உணர்வுப்பூர்வமாக இருந்தாலும் பின்னர் நிகழும் காட்சிகளில் லாஜிக் குறைபாடுகளால் நம்பகத்தன்மை குறைகிறது. படத்தின் இறுதிக்காட்சிகள் சற்றே ஏமாற்றத்தை தருகிறது.