சில்லுக்கருப்பட்டி வெற்றிக்கு பின், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஏலே'. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஷிகாந்தின் Y not Studios மற்றும் விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
அப்பா முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) இறந்து போக, சென்னையில் இருந்து ஊருக்கு வருகிறான் மகன் பார்த்தி (மணிகண்டன்). சிறு வயதில் இருந்தே அப்பாவின் ஊதாரித்தன குணத்தை கண்டு வெறுத்த மகனுக்கு, கண்ணீர் கூட வர மறுக்கிறது. இந்த சூழலில் காதலித்த பெண்ணுக்கு (மதுமிதா) அப்போது திருமணமும் நடக்கவிருக்க, கூடவே பிணமாக கிடந்த அப்பாவும் காணாமல் போக..?! அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
அப்பா முத்துக்குட்டியாக சமுத்திரக்கனி தனது அலட்டலான நடிப்பில் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். சமுத்திரக்கனி நடிப்பில் நிச்சியம் ஏலேவுக்கு தனி இடம் உண்டு. வெகுளித்தனமாக, ஊரில் ரவுசு விட்டுக்கொண்டு திரிவதுடன், இறுதியில் நம்மை கலங்கவும் வைத்து விடுகிறார். மணிகண்டன் பார்த்தி கதாபாத்திரத்துக்கு டெய்லர்-மேட் தேர்வு. வெறுப்பையும் ஆற்றாமையையும் படம் முழுக்க அழகாக சுமந்து திரிகிறார்.
காதல் காட்சிகளில் மதுமிதாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. படத்தில் நடித்திருப்பவர்கள் பலரும், படமாக்கப்பட்ட பகுதிகளை சார்ந்த மனிதர்களாக இருப்பது, யதார்த்தத்துக்கு நெருக்கமாக இக்களத்தை அமைக்க உதவுகிறது. சின்ன கதாபாத்திரங்களாக வரும்போதும், க்ளாப்ஸ் அள்ளும் வகையில் அவர்களை நடிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
தேனி ஈஸ்வரின் கேமரா, அந்த கிராமத்தின் குளிர்ச்சியை கலர்ஃபுல்லாக கண்ணுக்குள் கடத்துகிறது. சிறப்பான தரத்தில் காட்சிகளை உருவாக்க ஆர்ட் டைரக்ஷன், காஸ்ட்யூம் குழு நேர்த்தியான உழைப்பை காட்டியுள்ளது. கேபர் வாசுகி - அருள் தேவ் இசையில் பாடல்களும், இசையும் படத்துக்கு கூடுதல் பலம். கிராமத்து மனிதர்களின் இசையுடன் நக்கலான பின்னணி இசையையும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இவர்களின் ஸ்டைல் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பேசப்படும்.
சில்லுக்கருப்பட்டி படத்தினால் தன் மீதிருந்த பெரும் எதிர்ப்பார்ப்பை நிறைவோடு காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். தமிழில் மிக நேர்மையாக எடுக்கப்படும் ஃபீல்-குட் ட்ராமா திரைப்படங்களில் ஹலிதா ஷமீமின் படங்கள் நிச்சியம் நினைவுக்கொள்ளப்படும்.! அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை சுற்றியே, சரியாக ஹ்யூமரும் உணர்ச்சிகளும் கலந்து க்ளாப்ஸ் வாங்குகிறார்.! படத்தின் க்ளைமாக்ஸ் சரவெடி.
அப்பா - மகன் உறவுக்கும், மகனின் காதலக்கும் இடையில் திரைக்கதை ஆங்காங்கே தடுமாறி சென்றாலும், அடுத்தடுத்த திருப்பங்கள் நம்மை உற்சாகம் குறையாமல் கடத்தி சென்று, திருப்தியான படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.