இ4 எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆதித்ய வர்மா. கிரீஸய்யா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மருத்துவ மாணவரான துருவ், பனிட்டா சந்துவை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். சாதி உள்ளிட்ட பிரச்சனைகளால் தன் காதலியை பிரிய நேரிட, அந்த துயரில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதை.
முன் கோபமிக்க மருத்துவ மாணவராக, காதலியின் பிரிவில் அவதிப்டும் ஆக்ரோஷ இளைஞனாக முதல் படத்திலேயே கனமான வேடம் துருவிற்கு. தன் கேரக்டர் தான் படமே என்பதை புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் துருவ். தன் காதலியை ஒருவன் அசிங்கப்படுத்த, அவனைத் தேடிப்போய் அடித்த பின் எமோஷனலாக வசனம் பேசும் இடத்திலும், காதலியின் தந்தை காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்ற போது ஆக்ரோஷமாவது என நடிப்பு ராக்சஷனாக அவதரித்திருக்கிறார் துருவ்.
துருவின் காதலியாக அதிர்ந்து பேசாமல் ஒருவித அமைதியுடன் படம் முழுக்க எமோஷன்களை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார் பனிட்டா சந்து. சிறிது நேரமே வந்தாலும் ஹீரோயினாக வசீகரிக்கிறார் பிரியா ஆனந்த்.
துருவின் நண்பனாக அன்பு தாசன் துருவிற்கு மட்டுமல்லாமல் தனது காமெடியான ஒன் லைனர்களால் படத்துக்கும் பக்கபலமாக இருக்கிறார். துருவின் அப்பாவாக ராஜா, பாட்டியாக லீலா தாம்சன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.
படம் முழுக்க காதலியின் பிரிவினால் துயரில் இருக்கும் இளைஞனின் வாழ்வை சொல்லும் படத்தில் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையால் பலம் சேர்த்திருக்கிறார் ரதன். ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது.
ஆதித்ய வர்மாவின் கேரக்டரும் நிகழ்வுகளுக்கு அவரது ரியாக்ஷனும் என்ற வகையில் திரைக்கதை அமைத்திருந்த விதம் சுவாரஸியத்தை தந்தது. காதல் காட்சிகள் அதிகம் உள்ள படத்தில் காதலர்களான துருவ் மற்றும் பனிட்டா இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஏதோ ஒரு இழப்பிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு ஆதித்ய வர்மாவின் கேரக்டரை ரிலேட் செய்து கொள்ள முடியும்.
காதலுக்கு சாதி குறுக்காக வருவது போன்ற காட்சிகளில் சாதி சம்பந்தபட்ட விஷயங்களை மேம்போக்காக கடைபிடித்த இயக்குநரின் செயல் பாராட்டத்தக்கது. ஒரே ஊரில் இருக்கும் பனிட்டா பற்றி துருவிற்கும் துருவின் நண்பர்களுக்கும் தெரியாமல் இருப்பது படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது.இந்த படத்தின் நீளம் ஒரு சிலருக்கு குறையாக தெரியலாம். ஆனாலும் துருவின் நடிப்பும் சுவாரசியமான திரைக்கதையும் இந்த ஆதித்ய வர்மாவை ஸ்பெஷலாக்கியுள்ளது.