விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கபீர் சிங், ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆக்சன். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கதை எழுதி சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
சர்காருக்கு பிறகு தமிழக முதல்வராக மீண்டும் நடித்திருக்கும் பழ.கருப்பையாவும் அவரது மகன்கள் ராம்கி மற்றும் விஷால் தன் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தீவிரவாதிகளால் பழ.கருப்பையாவின் குடும்பத்திற்கு களங்கம் ஒன்று ஏற்பட தமன்னாவின் உதவியுடன் ராணுவ அதிகாரியான விஷால் எப்படி தீவிரவாதிகளை அழித்து பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.
முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தை இலகுவாக கையாண்டு தான் இந்த படத்துக்கு சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறார் விஷால். வெறும் காதல் காட்சிகளுக்கு பயன்படும் கதாநாயகியாக இல்லாமல் ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார் தமன்னா. முழுவதும் சீரியசான படத்தில் ஆங்காங்கே தனது ஒன் லைனர்களால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஷாரா. சிறிது நேரமே வந்தாலும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.
தன் அழகிய நடிப்பால் வசீகரிக்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. கபீர் சிங், ராம்கி, பழ.கருப்பையா, சாயா சிங், சாயாஜி ஷிண்டே, அஸ்வந்த் உள்ளிட்டோர் தங்கள் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
லண்டன், பாகிஸ்தான் , இஸ்தான்ஃபுல் என படத்தின் கதையை அந்தந்த நாடுகளின் சிறப்பம்சங்களுடன் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டட்லி. அடுத்தடுத்து ஆக்சன் காட்சிகள் என பரபரப்பாக நகரும் திரைக்கதையில் தனது பின்னணி இசையின் மூலம் கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.
படத்தின் முக்கிய திருப்பங்களை நம்மால் முன்பே கணிக்க முடிகிறது. ஆக்சன் காட்சிகளை சற்று நம்பகத்தன்மையுடன் படமாக்கியிருக்கலாம். சண்டையிடுதல் மட்டுமல்லாமல் ஹேக்கிங் உள்ளிட்டவை மூலம் விவேகமாக செயல்படும் பலம் வாய்ந்த ஹீரோவான விஷாலுக்கு நிகராக, வில்லன் வேடத்தை வடிவமைத்திருக்கலாம். திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.
மேலும் படத்தில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்டுகள் படத்தின் சுவாரசியத்தை குறைக்கிறது. பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளில் ஹீரோ விஷாலால் ஹேக்கிங் போன்ற விஷயங்களை ஈஸியாக செய்ய முடிவது படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது.