நடிகர் சிம்பு தனது கட்-அவுட்டிற்கு அண்டாவில் வந்து பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என தனது ரசிகர்களிடம் கூறியதன் நோக்கம் குறித்து அவரது நண்பரும் நடிகருமான மகத் Behindwoods தளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், சிம்பு உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். காவிரி விவகாரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்குமடி கர்நாடகாவினரிடம் சிம்பு கேட்டதற்கு பலரும் கலாய்த்தது அவரது மனதை புண்படுத்தியது. காதல் தோல்வியின் போதுக் கூட சிம்பு கண் கலங்கவில்லை. ஆனால், நல்ல நோக்கத்திற்காக சிம்பு எடுத்த முயற்சியை மட்டம்தட்டி பேசியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும், சிம்புவின் வேண்டுகோளை கர்நாடக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல், கட்-அவுட்டிற்கு பால் ஊற்றும் விஷயத்தில், பப்ளிசிட்டிக்காக சிம்பு செய்வதாக சொல்கின்றனர். அவர் பிறந்ததில் இருந்து பப்ளிசிட்டியுடன் இருக்கும்போது, டிரால் செய்பவர்கள் நெகட்டிவ் எனர்ஜியை கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கின்றனர். அது அவர்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பது எனது கருத்து.
சிம்பு நல்ல நோக்கத்தில் தான் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால், அதையும் டிரால் செய்ததால், வேண்டுமென்றே நெகட்டிவாக பேசியபோது அவர் கூறிய விஷயம் பிரபலமானது. நல்லது சொன்னா யாரு கேட்கறா கெட்டது சொன்னா உடனே போய் சேர்ந்துடுது என மகத் கூறினார்.
தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மகத், ஹீரோவாக ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவின் ரசிகராக மகத் நடிக்கவிருக்கிறார்.
சிம்புவுக்கு மாஸ் ஆடியன்ஸ் அதிகம் உள்ளனர். ஆனால், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் மூலம் சிம்பு ஃபெமிலி ஆடியன்ஸையும் கவர்வார் என்பது உறுதி என்றும் மகத் தெரிவித்துள்ளார்.