'தளபதி' விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெர்சல்' பாக்ஸ் ஆபீஸில் தறிகெட்டு ஓடி வசூலை வாரிக்குவித்தது. எனினும், ஒருசில ஊடகங்கள் 'மெர்சல்' தோல்விப்படம் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் 'மெர்சல்' வெற்றிப்படமா? தோல்விப்படமா என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.
இதற்கு விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பதில் பின்வருமாறு:-
விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படம் கோயமுத்தூர் பகுதியில் மட்டும் சுமார் 12 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் 'எந்திரன்' படத்தின் கோயமுத்தூர் வசூலையும், மெர்சல் முறியடித்தது. கோயமுத்தூர் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் 'மெர்சல்' படம் நல்ல வசூலைக் குவித்ததாக அப்பகுதி விநியோகஸ்தர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
'மெர்சல்' மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்ததால், அப்படம் தோல்விப்படம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 'மெர்சல்' படத்திற்கான சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகள் குறித்து எனக்கு தெரியவில்லை. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தான் பதிலளிக்க வேண்டும்.
ஆனால், ஒரு விநியோகஸ்தராக 'மெர்சல்' எல்லா இடங்களிலும் நல்ல வசூலைக் குவித்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.