பெண் கதாப்பாத்திரத்தை முதன்மையாக கொண்டு சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்துக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
பெண்கள் கிரிக்கெட் மையமாகக் கொண்ட திரைப்படம் இந்திய சினிமாவுக்கே புதிது என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்வில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் சத்யராஜ் பேசும்போது,
அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது.
இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை.
சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார்.