‘மின்சாரா கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் இசையின் அடிநாதமான தாளத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தின் இசையும், கதையும், கதாபாத்திரமும் உருவான விதம் குறித்து இயக்குநர் ராஜீவ் மேனனும், நடிகர் ஜி.வி.பிரகாஷும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இப்படம், பீட்டர் என்ற இளைஞனுக்குள் இருக்கும் திறமை, தான் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த ஒரு விஷயத்தை தவிர்த்து, தனக்கு பிடித்த இசையை தேடிச் செல்லும் பயணம் தான் ‘சர்வம் தாளமயம்’. இப்படத்தில் 2 விதமான இசை உள்ளது. சினிமாவுக்கு தேவையான கமர்ஷியல் ஃபார்மேட்டில் 4 பாடல்களும், அதற்கு நேர் எதிராக பக்காவான கர்நாடக இசையும் உள்ளது.
கூத்து பாட்டு, கானாபாட்டு, மேற்கத்திய இசை என பலவகையான இசையை மக்கள் ரசித்தாலும், நல்ல மெட்டுடன், சிறந்த பாடல் வரிகள் உடைய பாடல்கள் தான் தமிழ் மக்களின் மனதில் நிற்கும். அதை வைத்து சர்வம் தாளமயம் பாடல்கள் உருவானது என இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டிராக்கான ‘சர்வம் தாளமயம்’ பாடல் காஷ்மீர் முதல் கேரளா வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 18 நாட்கள் பயணம் செய்து பாடல்களை உருவாக்கியிருக்கிறோம். இதுவரை தமிழ் சினிமாவில் காணாத அற்புதமான லொகேஷன்களில் ‘சர்வம் தாளமயம்’ காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
தமிழில் சங்கராபரணம், சிந்து பைரவி போன்ற படங்களின் வரிசையில் இன்றைய இளைஞர்களுக்கு இசை விருந்தளிக்கும் விதமாக சர்வம் தாளமயம் இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.
நெடுமுடி வேணு, டிடி, வினித், அபர்ணா முரளி, குமாரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் வரும் பிப்.1ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.