உலகநயகன் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெல் மைதானத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் கமல் ஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...’ என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், நன்றி ரஜினிகாந்த். என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே .. நாளை நமதே. என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கூட்டணி குறித்து பேசிய கமல்ஹாசன், ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அவர்களாகவே தாமாக முன்வந்து கொடுக்க வேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்றார். மேலும், ரஜினிகாந்தின் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
— Rajinikanth (@rajinikanth) February 24, 2019