இந்திய பெண் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த ஆவண குறும்படம் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை இயக்குநர் ராய்கா மற்றும் தயாரிப்பாளர் மெலிசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இப்படத்தில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த குறைந்த விலையில் நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த நிஜ பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் நடித்துள்ளார். வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் பகுதியில் இருக்கும் பெண்கள், சிறுமிகள் தாங்கள் எதிர்க்கொள்ளும் மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்க, அவர்களது கிராமத்தில் பேட்மெஷினை உருவாக்குகிறார்கள் என்பதை விளக்கும் இப்படத்தை ஈரானிய-அமெரிக்கரான ராய்கா ஜெஹ்தாப்சி இயக்கியுள்ளார்.
பெண்களின் மாதவிடாய் விழிப்புணர்வு குறித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இந்தியர்களை பெருமையடையச் செய்துள்ளது. ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும், இந்த ஆஸ்கர் விருது மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.