சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பேட்ட’ திரைப்படம் மரண மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் பழைய ரஜினியின் துள்ளலான நடிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் Behindwoods தளத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது பேட்ட திரைப்படம் உருவான விதம், வசூல், சூப்பர் ஸ்டாரை பேட்ட ஈர்க்க என்ன காரணம் போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
இப்படத்தின் டைட்டில் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு நிறைய டைட்டில் யோசித்து வைத்திருந்தோம். முதலில் டைட்டில் வைக்கவில்லை, கடைசியாக டைட்டில் வைப்பது தான் எனது பழக்கம். ஆனால், ரஜினி சார் ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படத்தில் கமிட்டானது முதல் இந்த கதாபாத்திரத்தை தனக்குள்ளே உருவாக்கி வந்தார்.
அதற்கு டைட்டில் அவசியம் என கருதியதால் என்னிடம் டைட்டில் குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். நிறைய டைட்டிலை அவரிடம் கூறினேன், ஆனால் எதுவுமே செட்டாகாமல் இருந்தபோது ‘பேட்ட’ டைட்டில் ரஜினி சாருக்கு பிடித்திருந்தது. பல முறை அவரது ஸ்டைலில் ‘பேட்ட’.. ‘பேட்ட’.. ‘பேட்ட’ என சொல்லிப் பார்த்துவிட்டு, சூப்பர் என்றார்.
ஆனால், ரஜினி சார் படம் என்றாலே ‘படையப்பா’, ‘அண்ணாமலை’, ‘அருணாச்சலம்’, ‘கபாலி’ என பெயரை வைத்து தான் டைட்டில் இருக்கும். அதை பற்றியும் என்னிடம் கேட்டார், பேட்ட டைட்டிலை முடிவு செய்த பிறகு அதற்கு ஏற்ப பேட்டவேலன் என ரஜினி சார் கதாபாத்திற்கு பெயர் வைத்தோம் என கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.