தல அஜித்தின் விஸ்வாசம் நாளை வெளியாவதை முன்னிட்டு தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் அஜித், நயன்தாரா ஆகியோரின் நடிப்பு பற்றி இயக்குநர் சிவா கூறியதாவது,
இந்த படம் மதுரை மண்ணின் மைந்தனாக எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும், அதே சமயம் எமோஷனலான ஒருவரை பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, 'தூக்குதுரை' கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
அஜித் சார் உடனான என் முந்தைய திரைப்படங்களை விட விஸ்வாசம் படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான தருணங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு. இந்த பொங்கல் எங்களுக்கு சிறப்பான பொங்கலாக இருக்கும் என நம்புகிறோம்.
அஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாரா மேடமும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புகிறார்.
அஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே விஸ்வாசம் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். இதுவரை நான் பார்த்திராத பல வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒவ்வொரு செயலையும் அனுபவித்து செய்தார் என்று மிகவும் தெளிவாக தெரிந்தது.
நயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். சிறிய நுணுக்கங்களை கூட சரியாக கொடுக்கும் அவரது தன்னிச்சையான திறன் என்னை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். என்றார்.