வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா, அரீஷ் குமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குநருமான சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்னைகளை பேசுகிறான் என்கிறார்கள்.. பிரச்னைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான். அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்கலே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார்.
என்றைக்கு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணக் கூடிய நாகரிகத்தை இந்த சினிமா அங்கிகரித்ததோ அன்றே நாம் அடி முட்டாள்களாகிவிட்டோம். என்றார்.