அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து நானி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெர்ஸி' படத்திலிருந்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'மறக்கவில்லையே' பாடல் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும்' இந்தியன் 2' படத்துக்கு இசையமைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindwoods தளத்தில் உரையாடினார்.
அப்போது தனுஷுடன் நீண்ட நாட்களாக பணிபுரியாதது குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அனிருத், நிறைய பேரு எங்களுக்குள்ள பிரச்சனைனு சொன்னாங்க. அப்படிலாம் எதுவும் இல்ல.
'3' படத்துக்கு பிறகு 'வேலையில்லா பட்டதாரி' படம் வெளியாக இரண்டு வருடங்கள் ஆனது. ஆனால் அதற்கு அடுத்து 'தங்கமகன்', 'மாரி' என அடுத்தடுத்து பணிபுரிந்தோம். அதனால் சிறிது இடைவேளை எடுத்துக் கொள்ள நினைத்தோம். ஆனா அது கொஞ்சம் பெரிய பிரேக்கா மாறிடுச்சு.
அதனால் தான் 'பேட்ட' படத்துல அவர் இளமை திரும்புதே பாடல் எழுதுனாரு. அடுத்த வருடம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம்னு இருக்கோம் என்றார்.