வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் தமிழ் பெண்ணான ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சாலிகிராமில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குநருமான சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை ஸ்ரீபிரியங்கா, ‘பல போராட்டங்களுக்கு பின் ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்..
இங்கு நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..
இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.