‘களவானி மாப்பிள்ளை’ படத்தில் நடித்த நடிகை அதிதி மேனன், நடிகர் அபி சரவணன் என்பவர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘பட்டதாரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். அதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அபி சரவணன் என்பவருக்கும், அதிதி மேனனுக்கு இடையே காதல் உருவாகியுள்ளது.
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். அந்த நேரத்தில் நடிகை அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தனது பொருட்களை எல்லாம் திருடிவிட்டு தலைமறைவானதாக நடிகர் அபி சரவணன் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை அதிதி மேனன், நடிகர் அபி சரவணன் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிதி, அபி சரவணனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிரிந்து விட்டதாகவும், அவரை திருமணம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ட்விட்டர், மெயில் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களை ஹேக் செய்து போலியான திருமண சான்றிதழ்களை அபி சரவணன் உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதிதி மேனனின் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளனர்.