இளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி !

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.இளைஞர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் களத்தில் இறங்கி பல மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் திருவனந்தபுரம் நிவாரண முகாமில் நிவாரணப் பொருட்களைப் பெற்று அவற்றை பிரித்து தேவையுள்ள பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு ஓ போட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார் அம் மாவட்ட ஆட்சியர் வாசுகி ஐ.ஏ.எஸ்

 

நிவாரண முகாம் பணிகளுக்கு இடையே ஒரு சில நிமிடங்கள் பேசிய வாசுகி, "ஒரு நிமிடம் கவனியுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்ந்து செய்கிறீர்களா?.. நீங்கள் எல்லோரும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். மலையாளிகளால் என்ன செய்ய முடியும் என்பதை உலகத்துக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

இப்படி ஒரு தன்னார்வம், தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. எனது அபிப்பிராயத்தில் நீங்கள் எல்லோரும் ராணுவ வீரர்கள் போல் தெரிகிறீர்கள்.

 

அரசாங்கத்துக்கு நீங்கள் அவ்வளவு பணம் மிச்சம் செய்து கொடுத்திருக்கிறீர்கள். லோடிங், அன்லோடிங், பேக்கிங் என லேபர் சார்ஜை நீங்கள் மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். கோடிக்கணக்கில் பணம் மிச்சம் செய்யப்பட்டுள்ளது.

 

உங்கள் பணி ஆச்சர்யப்பட வைக்கிறது. உங்களுடன் நிறைய நேரம் செலவு செய்ய முடியவில்லை என்று வருத்தமாகியிருக்கிறது.

நான் கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் ஏதாவது சிறப்பாக செய்தால் நாங்கள் ஓ போட்டு உற்சாகப்படுத்திக் கொள்வோம். எப்படி ஓ போடுவோம் தெரியுமா? ஓ போடு என்று சொன்னவுடன் மொத்தமாக எல்லோரும் ஓஹோ என்று சொல்வோம். இப்போது உங்களுக்கும் ஓ போட விரும்புகிறேன். ஓ போடலாமா" என்று மீட்பு குழுவினரை உற்சாகப்படுத்துகிறார்.

 

சென்னையை  சேர்ந்த இவர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் படித்தவர்.இவருடைய கணவரும் ஐ.ஏ.எஸ்  அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

BY JENO | AUG 21, 2018 4:01 PM #KERALAFLOOD #VASUKI IAS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS