கவிஞர் வைரமுத்து பல வருடங்களுக்கு முன்பு எழுதிய நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் என்று வைரமுத்துவின் ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே தமிழ் நாவல் உலகில் ஒரு வீச்சு என்றே சொல்லலாம். அவற்றில் மதுரையின் மண் வாசமும், தமிழ் மக்களின் ஆழ்ந்த மரபும் படிந்திருக்கும். அந்த அளவுக்கு வைரமுத்துவின் வரிகளில்  மண் சார்ந்த பாதிப்பும் தாக்கமும் இருந்துகொண்டே இருக்கும். எப்போதுமே தேசிய விருதுகள், சாகித்திய அகாதமி விருதுகள் மரபும் மண்ணும் சார்ந்த நாவல்களுக்கு கிடைப்பதுண்டு.

 

கள்ளிக்காட்டு இதிகாசத்தை பொருத்தவரை, கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றிருந்தது.  அதே சாகித்ய அகாடமி கள்ளிக்காட்டு இதிகாசத்தை 23 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தும் வருகிறது.  அதன் முதல் முயற்சியாக  இந்திய நாட்டின் தேசிய மொழியான இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் ஹெச்.பாலசுப்பிரமணியன் எனும் எழுத்தாளர் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

 

கடந்த ஆண்டு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் சிறந்த புத்தகத்துக்கான விருதினை இந்தி மொழி கள்ளிக்காட்டு இதிகாசமான, ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ பெறுகிறது.  இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் வழங்கும் இந்த விருது பற்றிய செய்தியை மத்திய அரசின் கலாச்சார துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

’என் வீடு தாய்தமிழ்நாடு, என் நாமம் இந்திய நாமம்’ என்று பாடல் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இந்தியாவின் அலுவல் மொழியான இந்தியில் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | AUG 29, 2018 12:27 PM #VAIRAMUTHU #KALLIKATTUITHIKASAM #INDIASBESTBOOK #SAHITYAACADEMY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS