'மனைவியை துண்டு துண்டாக வெட்டிய சினிமா டைரக்டர்'.. பகீர் வாக்குமூலம்!

Home > தமிழ் news
By |

மனைவியை துண்டு துண்டாய் வெட்டி வீசியது பற்றி சினிமா இயக்குநர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21-ஆம் தேதி சென்னை பெருங்குடியில் வெட்டப்பட்ட  கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த உறுப்புகளுக்குண்டானவர் ஒரு பெண் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். கையில் வளையலும் காலில் மெட்டியும் இருந்த அந்த உடல் உறுப்புகளையும் அந்த உறுப்புகளில் பச்சை குத்தப்பட்டிருந்த சிவன் - பார்வதி ஓவியங்களை வைத்தும், அந்த கை ரேகையை வைத்தும், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார், அந்த பெண் பற்றிய விபரங்களை தேடத் தொடங்கினர்.

மிகவும் கஷ்டப்பட்டு, ஆதார் கைரேகை, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு, உறவினர்களுடனான நேரடியான விசாரணை என பலவிதமான முறையில் துப்பு துலக்கிய காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர் நாகர்கோவிலைச் சேர்ந்த 38 வயதான சந்தியா என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் அவரது கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் என்பவர் சினிமா இயக்குநர் என்பதையும் கண்டுபிடித்து அவரை விசாரிக்கத் தொடங்கினர். முதலில் பாலகிருஷ்ணன் தன் மனைவியை தேடுவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,  அப்பகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்து பின்னர் சினிமா ஆசையில், சென்னை வந்தவர், ‘காதல் இலவசம்’ என்கிற படத்தை தூத்துக்குடியிலேயே வைத்து பல ஆண்டுகளாக இயக்கியவர். 

அவருக்கும் அவரது மனைவிக்கும் 2 குழந்தைகள் இருந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்ததை அடுத்து முதலில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். ஆனால் சினிமா ஆசையில் வந்து சினிமாவில் சாதிக்க முடியாததாலும், பின்னர் அரசியலில் இறங்கியதாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி மனைவியுடன் பாலகிருஷ்ணன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். ஆனால் மீண்டும் ஒருநாள் சந்தித்த இருவரும் பேசிக்கொண்டபோது எழுந்த வாக்குவாதத்தால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தன் மனைவியைக் கொன்றுள்ளார்.

பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் துண்டு துண்டாக வெட்டி கை, கால்களை அரிசி பையில் வைத்து கே.கே.நகரின் குப்பைத் தொட்டியிலும், மீதமிருந்த பாகங்களை கூவம் ஆற்றிலும் வீசியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  தன் வீட்டில் இருந்த சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றியதை அடுத்து பாலகிருஷ்ணன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைதான கணவர் பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டியதை அடுத்து, சென்னை-ஜாபர்கான்பேட்டை அடையாற்றுப் பகுதியில் இருந்து பாலகிருஷ்ணனின் மனைவி, சந்தியாவின் இடுப்பு முதல் முழங்கால் வரையிலான பகுதி தற்போது மீட்கப்பட்டிருக்கிறது. போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

CRIME, BIZARRE, DIRECTOR, MURDER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS