வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ‘கலைஞர்’ என்கிற பெயர் மாறியுள்ளது. ஆனால் அந்த பெயரை சூட்டியவரை உலகமறிய வாய்ப்பில்லை. பலரும் ’நடிகவேள்’ எம்.ஆர்.ராதாதான் கருணாநிதிக்கு கலைஞர் என்கிற பெயரை சூட்டியதாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் எம்.ஆர்.ராதா அந்த பெயரை வைக்கவில்லை.

 

அன்றைய காலத்தில் திருச்சியில் அவர் நிகழ்த்திய ’தூக்கு மேடை’ நாடகத்தை கருணாநிதி எழுதியிருந்தார். அதன் அருகே நிகழும் சில நாடகங்களின் விளம்பர பலகைகளில், ‘அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்’ என்பது போன்று எழுதிப் போடுவார்களாம். ஆனால் கருணாநிதி எழுதிய நாடகம் மட்டும், வெறுமனே ‘தூக்கு மேடை’ என்றிருந்ததாம்.

 

அப்போது எம்.ஆர்.ராதாவிடம் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் ஒருவர் இதைக் கண்டதும், எம்.ஆர்.ராதாவிடம், ‘அண்ணே.. கலைஞரின் தூக்கு மேடைன்னு வைக்கலாம்ணே’ என்று ஆலோசனை கூறினாராம். அதை ஆமோதித்த எம்.ஆர்.ராதா அன்றே கலைஞர் என்று அந்த விளம்பரப் பலகையிலும் வரலாற்றிலும் எழுதச் சொன்னார்.

 

அதையும் அந்த பெயர் சூட்ட ஆலோசனை சொன்ன எலக்ட்ரீசியனையே செய்யச் சொன்னார். அந்த எலக்ட்ரீசியன் பாஸ்கர், கலைஞரை ஒரு முறை சந்திக்க வந்தபோது, எழுத்தாளர் தமிழ்மகனிடம் நேரடியாக பகிர்ந்துகொண்ட இந்த அரிய தகவல் சென்ற வருடம், தமிழ் வாராந்திரியான விகடனில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

இத்தகைய பெயருக்கு சொந்தக் காரரான கலைஞரின் இயற்பெயர் என்ன தெரியுமா? நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்கிற கிராமத்தில் எளிய இசை சார்ந்த முத்துவேலர் வைத்தியர் குடும்பத்தில் அஞ்சுகத்தின் மகனாய் 1924, ஜூன் 3ம் தேதி அவதரித்த கலைஞர் மு.கருணாநிதிக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் தட்சணாமூர்த்தி!

BY SIVA SANKAR | AUG 8, 2018 1:14 PM #MKSTALIN #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #DMK #KALAIGNARKARUNANITHI #WHONAMEDKALAIGNAR #KALAIGNARSREALNAME #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS