அரசு பேருந்தை ஓடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட,பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை  சேர்ந்தவர் கிருஷ்ண சுந்தர ஆனந்தம்.இவர் விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். உடன் நடத்துநர் அய்யனார் பணியில் இருந்தார். அந்த சமயம் 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.

 

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநர் கிருஷ்ண சுந்தர ஆனந்தத்துக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத அவர் உடனடியாக பேருந்தை சாலையோரம் ஓரங்கட்டினார்.அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.தொடர்ந்து அவர் இருக்கையில் இருந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பயணிகள் நடத்துநரோடு சேர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் அம்மாபேட்டை போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையிலும் பயணிகளைக்  காப்பாற்றிய ஓட்டுநரின் இந்த செயல் பயணிகளை நெகிழ  வைத்துள்ளது.

BY JENO | SEP 12, 2018 4:27 PM #BUS DRIVER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS