‘பகவானின் அம்மா என்றாலே மதிக்கமாட்டார்கள்’ .. விருதுவிழாவில் கண்கலங்கிய ஆசிரியரின் அம்மா!

Home > News Shots > தமிழ் news
By |

15 வருடங்களாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியாவாக திகழும் பிஹைண்ட்வுட்ஸின் 6-வது கோல்டு மெடல்ஸ் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னை டிரேடு செண்டரில் கோலாகலமாக நடந்தது. ‘ஹானரிங் தி இன்ஸ்பிரேஷன்’ என்கிற நோக்கில் ஆசிரியர் திரு. பகவான் அவர்களுக்கு ICON OF INSPIRATION என்கிற விருதினை பெருமிதத்துடன் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் கவுரவப்படுத்தியது.

இவ்விழாவில் ஆசிரியர் பகவானுக்கான விருதினை நடிகரும் இயக்குநரும் சமூக ஆர்வலருமான கரு.பழனியப்பன் வழங்கினார். அப்போது அவர் ,‘நான் எல்லாம் கணக்கு வாத்தியாருக்கு கை செயலிழந்துவிட வேண்டும் என்றெல்லாம் வேண்டியிருக்கிறேன். எல்லாருக்கும் ஆசிரியர்கள் மீது சிறுவயதில் கோபம் இருந்திருக்கும். ஆனால் ஒரு ஆசிரியர் பணியிட மாறுதல் காரணமாக வேறு பள்ளிக்குச் செல்கிறார் என்றபோது அத்தனை குழந்தைகளும் அவரை வழிமறித்து அழுதபடி அவர் போகக்கூடாது என அறப்போராட்டம் செய்தார்கள் என்று சொன்னார்கள். அந்த பெருந்தகைக்குரிய வரலாறை முதல்முதலில் எழுதவைத்த ஆசிரியர்தான் இந்த பகவான். தமிழ் சினிமாவில் எல்லா இயக்குநர்களுக்குமே வாத்தியாரின் இடத்தை பிடித்துவிடவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சமூகத்தில் பகவான் மாதிரியான ஆசிரியர்கள் வரவேண்டும் என்பதுதான் அதைவிட அவசியமான ஒன்று’ என்று ஆசிரியர் பகவானுக்கு அறிமுகம் கொடுத்து தன் உரையை முடித்துக்கொண்டார்.

பிஹைண்ட்வுட்ஸின் விருதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து பேசத் தொடங்கினார் பகவான்.

‘பொதுவாக படித்து மெடல் வாங்குவார்கள். நான் படிப்பைச் சொல்லிக்கொடுத்து விருதை வாங்கியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். நான் பதம் பார்க்கப்பட்ட சோறு. என்னைப் போல் இன்னும் நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்’ என்று பேசியவர் தன் தாய் தந்தையரை மேடைக்கு அழைக்கச் சொல்லி கோரினார்.  பின்னர் மேடைக்கு வந்த, ஆசிரியர் பகவானின் தாய் தந்தையரின் முன்னால், பகவான் மீண்டும் பேசினார்.

‘எல்லாப் பெண்களையும் போல  அம்மாவுக்கு தங்கம் என்றால் பிடிக்கும். கல்லூரி காலங்களில் நான் கட்டுரை, கவிதை, எழுத்துப்போட்டிகளில் வெற்றிபெற்று வீட்டுக்கு வாங்கிவரும் ஷீல்டு விருதுகளை பார்த்து அம்மா இது தங்கமா? என்றெல்லாம் கேட்பார்கள். அதெல்லாம் பொய்த்துப் போனது. தற்போது உண்மையான தங்க மெடலை வாங்கியதால் இந்த மெடலை எனது அம்மாவுக்கு அணிவிக்க விரும்புகிறேன்’ என்று சொல்லி தன் அம்மாவுக்கு அணிவித்து, அவரின் காலில் விழுந்து ஆசிபெற்றபோது ஆசிரியர் பகவானின் தாயார் பீறிட்டு அழுதார்.

மேலும் பகவானின் தாயார் பேசும்பொழுது, ‘ஊர், சொந்தம் யாரும் என்னை பகவானின் தாயார் என்று மதிக்க மாட்டாங்க. இழிவுபடுத்துவார்கள். தரக்குறைவாக நடத்துவாங்க. எதற்கும் கூப்பிடவும் மாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது எம்ஜிஆர் மதிய உணவு மற்றும் கோதுமை சோறு உள்ளிட்டவைகளை வாங்கிவந்துதான் நாங்கள் சாப்பிட்டோம். அத்தனை உணவுப்பஞ்சம்’ என்று நெகிழந்துருகி அத்தனை வருட பாரத்தை இறக்கிவைத்து, பிஹைண்ட்வுட்ஸின் பிரம்மாண்ட மேடையில் பெருமிதக் கண்ணீர்ப் பெருக்கினால் புனிதமாக்கினார்.  பின்னர் பேசிய பகவான், ‘மாணவர்கள் அழுதும் தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள் என்பதை எனது பணிமாறுதலின்போதுதான் நான் உணர்ந்தேன்’ என்று நெகிழ்ந்து கூறினார்.

BHAGAVANTEACHER, BEHINDWOODSGOLDMEDALS, KARUPAZHANIAPPAN, BEHINDWOODSGOLDMEDALS2018

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES