அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார் விஜய் மாருதி பிங்களே ஐஏஎஸ். 2004-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான இவர் மிகவும் நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி ஆவார்.
மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான விஜய் பிங்களே தனது 14 வருட ஐஏஎஸ் பணியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.2013-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த போது விஜய் பிங்களே, தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களை, மீண்டும் தரமான சாலைகள் போட வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு சென்னை நகரின் உள் கட்டமைப்பு பணிகளை கண்காணித்தார். பின்னர் தொழிற்துறை இணை செயலாளராக மாற்றப்பட்ட அவர், சென்னையில் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் காட்டினார்.
மேலும் பொறியாளர்களை கொண்ட ஒரு சிறப்பு பிரிவை உருவாக்கி சென்னையில் போடப்படும் சாலைகளின் தரம் குறித்து ஆராய்ந்து தரமற்ற சாலைகளை மீண்டும் போடுவதற்கு ஆணையிட்டார்.இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிங்களேவின் ராஜினாமா அவரது சக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நிர்வாகத்தினுள் ஒருவராக இருந்து சீர்திருத்தங்களை கொண்டு வர நினைத்த விஜய் பிங்களே, சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை தமிழக அரசு இதுவரை ஏற்கவில்லை என தெரிகிறது.
அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், தம்மை இணைத்து கொண்டு அவர் செயல்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
OTHER NEWS SHOTS