திடீரென செல்போன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா?.. 2.O உருவான விதம்!
Home > தமிழ் newsஇயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குனர் முரளி மனோகர் 2.O படம் உருவான விதம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,'' #2.0 பார்வையாளர்களுக்குப் புது சினிமா அனுபவத்தைத் தரும். 2012ம் ஆண்டு எங்கள் இயக்குநர் ஷங்கர் சாருடன் நான், பாலா (Malathi Murugan), விஷ்ணு (Vishnu L Bhaskaran), எழுத்தாளர்கள் சுபா (Suresh Subha) ஆகியோர் கர்நாடகாவின் கூர்க்கில் ஐ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். ஒரு மாலைப் பொழுதின் கதை விவாதத்தின்போது, "திடீரென செல்ஃபோன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா என்ன ஆகும்!" என இயக்குநர் கேட்டார். அவர் கேட்ட அந்த கேள்விதான் 2.0 படம் உருவாவதற்கான முதல் ஸ்பார்க். கதைக்கான அந்த பொறி, மெல்லக் கனன்று, பற்றி பரவிப் படர்ந்து வளர்ந்து, ஆண்டுகள் கடந்து, இன்று உலக திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம் கொண்ட சினிமாவாக வந்திருக்கிறது.
2.0 படத்திற்கான டப்பிங் பொறுப்பை இயக்குநர் எனக்குக் கொடுத்தார். படத்தின் டப்பிங், ஒரு உதவி இயக்குநராக எனக்குப் பல மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்தது. ரஜினி சார் சரியாகக் காலை 9.30 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்துவிடுவார். அவர் தனக்கான இருக்கையில் அமர்ந்த பின் மைக்குகள் செட் செய்து 9.45 மணி அளவில் வேலையைத் தொடங்குவோம். நான் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொள்வேன். டப் செய்ய வேண்டிய காட்சிகளின் ஸ்கிரிப்ட் பிரதிகள் அவர் கையில் ஒன்றும் சரிபார்த்துக்கொள்ள என் கையில் ஒன்றும் இருக்கும். பேச வேண்டிய காட்சியின் கால நீளத்தை ஒரு முறைப் பார்த்து உள்வாங்கிக்கொள்வார் ரஜினி சார். பிறகு பேப்பரில் உள்ள உரையாடலை அவர் படித்துக்கொண்ட பின் டேக் போவோம். பெரும்பாலும் ஒரே டேக்தான்.
சில வார்த்தை உச்சரிப்புகள், ஏற்ற இறக்கங்கள், அழுத்த வேண்டிய சங்கதிகளுக்காக, அவ்வப்போது 'ஒன் மோர்' கேட்பேன். "ஏன் ஒன் மோர்..?" எனக் காரணம் கேட்பார். விளக்கிச் சொல்வேன். புரிந்துகொண்டு பேசிக்கொடுத்துவிட்டு "ஓ.கே. முரளி..?" எனக் கேட்பார். நான் சிரித்துக்கோண்டே "ஓ.கே. சார்.." என்பேன். அவர் டப்பிங் பேச வந்த முதல் நாள் சில மணி நேரங்களில்தான் அந்த 'ஏன் ஒன் மோர்..?' கேள்வி இருந்தது. பிறகு எங்களுக்குள் ஒரு புரிதல் வந்தபின் எத்தனை ஒன் மோர் கேட்டாலும் காரணம் கேட்காமல் பேசிக்கொடுத்தார். நீளமான வசனங்கள் வரும்போது திரையையும் ஸ்கிரிப்ட் பேப்பரையும் மாறி மாறிப் பார்த்துப் பிசிறு தட்டாத பர்ஃபெக்ட் சிங்க்கில் ரஜினி சார் பேசுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். இடையிடையே கொஞ்சம் வெந்நீர் பருகி தொண்டையை நனைத்துக்கொண்டு மதியம் 1.30 வரை டப் செய்வார். ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. ஸ்டூடியோவில் உள்ள தனக்கான அறைக்குச் செல்லும் ரஜினி சார், வீட்டிலிருந்து வந்த உணவை எங்களுக்கும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.
மதிய உணவுக்குப் பின் 2.30 மணிவாக்கில் தொடங்கி மாலை அய்ந்தரை ஆறு வரை சென்று அன்றைய தினத்தை 'பேக் அப்' செய்துகொள்வோம். இப்படியாகத் தொடர்ந்த டப்பிங் நாட்களின் கடைசி நாளில் எனது 'கர்ண மோட்சம்' குறும்படத்தின் டி.வி.டியை அவரிடம் கொடுத்தேன். அடுத்த நாள் மாலை புதிதாக ஒரு லேண்ட் லைன் எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் யாரோ கூப்பிடுறார்கள் என நினைத்து அட்டெண்ட் செய்தால் எதிர் முனையில் ரஜினி சார் பேசினார். அப்போதுதான் கர்ண மோட்சம் பார்த்து முடித்ததாகவும் படம் பெருமளவில் தன்னைப் பாதித்துவிட்டதாகவும் சொல்லிப் பாராட்டித் தள்ளினார். நான் தலைகால் புரியாமல் திகைப்பும் பதட்டமுமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். 'எப்போ திரைப்படம் இயக்கப் போறீங்க... என்ன மாதிரியான கதைகள் வச்சுருக்கீங்க...' என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். சுமார் பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்தது அந்தத் தொலைபேசி உரையாடல். அதன் பிறகு அவ்வப்போது வரும், 'R.K. Home' என நான் பதிவு செய்திருக்கும் லேண்ட் லைன் எண்ணிலிருந்து அழைப்பு!
2.0க்காக வசீகரன், சிட்டி, 2.0, மற்றும் ஒரு சர்ப்ரைசான கேரக்டர், என நான்கு விதங்களில் டப்பிங் பேசியுள்ளார் ரஜினி சார். இயக்குநர் பார்த்த பிறகு அவர் சொல்லும் 'ரஜினி சார் கரெக்ஷன்'களுக்காக மீண்டும் அவரை ஸ்டூடியோவுக்கு அழைப்போம். முன்னதாக ஃபோனில் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து, சட் சட்டென நான்கு கதாப் பாத்திரங்களுக்கும் குரல் பாவணைகள் மாற்றி மாற்றிப் பேசி ஆச்சர்யப் படுத்துவார்.
ரஜினி சார் டப்பிங்கிற்கு அடுத்ததாக எங்களுக்குச் சவாலாக இருந்தது அக்ஷய் குமாரின் டப்பிங்தான். அக்ஷய் ஹிந்தியில் பேசி நடித்த காட்சிகளுக்கு லிப் சிங்க் செய்துத் தமிழ் உரையாடல்களை டப் செய்ய வேண்டும். அதற்காக கை தேர்ந்த டப்பிங் கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்; என்றாலும் அக்ஷயின் தோற்றத்திற்கும் கதாப்பாத்திரத்திற்கும் பொருத்தமான குரல் வேண்டுமே! ஒரு இருபது பேர் வரைத் தேர்ந்தெடுத்து வாய்ஸ் டெஸ்ட் செய்தோம்.
இறுதியில் நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷ் சாரின் குரல் அக்ஷய் நடித்திருக்கும் பக்ஷிராஜன் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்தி வந்தது. அந்தக் கதாப்பாத்திரத்திற்கும் மூன்று வெவ்வேறு விதமான பரிமாணங்களில் குரல் மாற்றி நடிக்க வேண்டும். அதிலும் குறிப்பிட்ட ஒரு கெட் அப்பிற்கு மட்டும் ஒவ்வொரு வசனத்தையும் மூன்று முறை வெவ்வேறு பாணியில் பேசிப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஜெயப் பிரகாஷ் சார், கொஞ்சமும் சலிக்காமல், முழு ஈடுபாட்டோடு, தனக்குள்ளிருக்கும் நடிகனுக்கான முழு ஆற்றலையும் குரலில் வெளிக்கொண்டு வந்து அக்ஷய் குமாரின் கேரக்டருக்கு உயிர் கொடுத்தார்.
அதே போல ஹிந்தியில் பேசி நடித்திருக்கிற இன்னும் சில நடிகர்களின் கதாப்பாத்திரங்களுக்கு பின்னணிக் குரலைத் தேடிப் பிடிக்க ரொம்பவே மெனக்கெட்டோம். ஒவ்வொரு கேரக்டருக்கும் இருபது இருபத்தைந்து பேர் வரை வாய்ஸ் டெஸ்ட் செய்தோம். சென்னையில் இருக்கும் தமிழ் பேசத் தெரியாத ஒரு வட மாநிலத்தவர் தட்டுத்தடுமாறித் தமிழில் பேசினால் எப்படி இருக்கும்? படத்தில் வரும் அப்படியான ஒரு கதாப்பாத்திரத்திற்கு இங்கு தேடிக் கிடைக்காமல் மும்பை வரை சென்று குரல் தேடினேன். கடைசியில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்த அஷ்வினின் குரல், அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்தி வந்தது. தரமணியில் கதாநாயகனாக நடித்திருந்த வசந்தின் (Vasanth Ravi) குரல், 2.0 வின் முக்கியமான வில்லனாக நடித்திருக்கும் சுதான்ஷோவிற்குத் தேடிப் பிடிக்கப்பட்டது. ஹிந்தியில் பேசி நடித்திருக்கும் ஆதில் ஹூசைனின் உடல் மொழிக்குப் பொருத்தமான குரலாக நடிகர் சேத்தனின் குரலைத் தேடிப் பிடித்தோம்.
2.0, கதை உருவாக்கத்திலும் டப்பிங்கிலும் இப்படிப் பல்வேறு சினிமா அனுபவங்களை எனக்குத் தந்தது. 2.0, தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத முற்றிலும் புதிய கதைக்களம். இந்தப் படத்தை 'சைன்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர்' என்ற ஒரே வகைப்பாட்டிற்குள் மட்டும் அடக்கிச் சொல்லிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சூழலியல் அக்கறை படத்தில் பொதிந்திருக்கிறது. அதையும் நவீன சினிமா தொழில்நுட்பத்தின் உன்னதத்தையும் திரையரங்கில் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#2Point0
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த 'மரண மாஸ்' அப்டேட் உள்ளே!
- இந்த நம்பர் 1, நம்பர் 2 'கணக்கெல்லாம்' எனக்கு கெடையாது
- 'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்'.. தலைவரைப் புகழ்ந்த சிங்கம்!
- '2.O பார்க்க இயக்குநர் விடவில்லை'.. வாரிசு நடிகை வருத்தம்!
- Mother asks for amenities for breastfeeding at mall; Receives appalling response
- WATCH | Rape Victim Asks For Help On Street; People React In The Most Shocking Way
- ‘நீங்களும் 2.0-வின் வில்லன் ஆகலாம்’.. இத ட்ரை பண்ணுங்க!
- ‘அறைத் தோழி இப்படியெல்லாம் இருக்கனும்’.. பெண்ணின் அதிரவைக்கும் கண்டிஷன்கள்!
- WATCH | Restaurant Shuts Down After Video Shows Employees Cooking Rat On Grill
- Teen Loses License Just 49 Minutes After Passing Driving Test; Here's Why