யானைகளின் புகலிடமாக தமிழ்நாட்டில் முதுமலை இருந்துவருகிறது. நீலகிரி, உதகமண்டலம், மூணார் பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் பொதுவாகவே யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். மேற்கண்ட பகுதிகளில் உள்ள காடுகளில் மட்டுமல்லாது, யானைகள் அந்தப் பகுதிகளின் சாலைகளைக் கடந்து செல்லவும் செய்கின்றன. உண்மையில் அவற்றின் வழித்தடத்தில்தான் சாலைகள் உள்ளன. எனவேதான் அவை சாலைகளைக் கடக்கும்போது விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. குட்டி யானைகள் தனித்து வரும்போது விபத்துக்குள்ளாவதால் தாய் யானைகள் அவற்றைத் தேடி சாலைகளுக்கு வரத் தொடங்குகின்றன. அதுமட்டுமல்லாது அருகி வரும் (குறைந்து) நீர்நிலைகள் யானைகள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணுகின்றன.

 

முன்னதாக நீலகிரி மாவட்டதைச் சேர்ந்த ரங்கராஜன் மற்றும் யானை ராஜேந்திரன் உள்ளிட்ட 23 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  பசுமையும் நீர்நிலைகளும் நிறைந்த நீலகிரி மாவட்டங்களில் யானைகள் அதிக அளவில் செல்லும் வழித்தடங்களில்  அரசின் விதிகளையும் மீறி ரிசார்ட்கள் எனப்படும் தனியார் சொகுசு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருப்பதாக அந்த வழக்கு தொடரப்பட்டது.

 

யானைகள் செல்லும் வழித்தடங்களில், அரசு விதித்துள்ள விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய விரிவான விபரங்களை  அனைத்து மாநிலங்களும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்கிற ஆணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, 446 விடுதிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் அப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், மதன் லோக்கூர், கே.எம்.ஜோசப் உள்ளிட்டோர் கொண்ட அமர்வு  ஒவ்வொரு மாநிலமாக விசாரித்து வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் முறையின்றியும் காட்டு யானைகளின் வாழ்வியலுக்கு ஊறு விளைவிக்கும்படியும் கட்டப்பட்டுள்ள 11 சொகுசு தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.  தொடர்ந்து இதர 39 விடுதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அரசின் அனுமதி பெறவில்லை என்றால் அவற்றையும் இழுத்து மூடுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

BY SIVA SANKAR | AUG 9, 2018 3:19 PM #WILDANIMALS #NILGIRS #ELEPHANTSTN #11NILGIRIRESORTS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS