வேதாந்தா, பசுமைத் தீர்ப்பாயம் இரண்டுக்கும் எதிரான ஒரே தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Home > தமிழ் news
By |

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டதால் போராட்டமாகவே அது மாறியது. சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாவதாக பொதுமக்களால் பல்வேறு வகையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒன்று வன்முறைக் கலவரமாக மாறியது. அதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழுவோ ஆய்வு செய்துவிட்டு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை என்று அறிக்கை கொடுத்ததன்பேரில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசோ, அதைச் சொல்ல பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்றுச் சொல்லி, மேல்முறையீடு செய்தது. இதனிடையே பசுமைத் தீர்ப்பாயம் சொல்லியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முன்வராத தமிழக அரசுக்கு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது.

இப்படியான சூழலில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்றிருந்த நிலையில், தூத்துக்குடியில் சுமார் 1500 போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒருவழியாக தீர்ப்பும் இன்று வந்தது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான தீர்ப்புடன், வேதாந்தா நிறுவனத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாக தமிழக அரசுக்கு எதிரான வழக்கினை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

STERLITE-CONTROVERSY, STERLITE, VEDANTA, THOOTHUKUDI, TAMILNADU, SUPREMECOURT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS