
மஹாராஷ்டிரா (புனே): திரைப்படங்களில் வரும் சில ஆண்கள் காதலிக்கத் தொடங்கிவிட்டால் போதும் அவர்களுக்கு தலைகால் புரியாது. அதிலும் ஹீரோ, ஹீரோயினுக்கு இடையில் ஊடல் வந்தால் போதும், கவுதம் மேனன் படங்களில் வருவது போல், ‘மன்னிப்பாயா’, ‘சாரி’ என்று ஹீரோயின் செல்லும் வழியெங்கும் பூங்கொத்துகளை வைத்து, சமாதானப் படுத்துவார்கள். இதேபோல் அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு காதலர் தன் காதலியை சமாதானப் படுத்தியிருக்கிறார். இதற்கென நகரம் முழுவதும் சுமார் 300 பேனர்களில், காதலியிடம் காதலுடன் மன்னிப்பு கேட்பதுபோல் வாசகங்களை எழுதி வைத்திருக்கிறார்.
புனேவில் உள்ள பிம்ப்ரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நிலேஷ். அவரது காதலி சிவ்டே. இவர்களுக்கிடையே அண்மையில் ஊடல் உண்டானது. அதைத் தொடர்ந்து தன் காதலியை சமாதானப் படுத்தி அவரின் நன்மதிப்பை பெற விரும்பிய காதலர் நிலேஷ், புனே நகரத்தில், சினிமாக்களில் வருவதுபோல் தன் காதலி செல்லும் வழியில், ஆங்காங்கே ’ஷிவ்டே, ஐ அம் சாரி’ என்று எழுதப்பட்ட 300 பேனர்களை வைத்திருக்கிறார். ஆனால் அனுமதியின்றி இரவு வேளையில் சாலை வழியில் வைக்கப்பட்ட இந்த பேனர்களைக் கண்ட போலீசார் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அடுத்து, நிலேஷ் மீது புனே மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை தேவையில்லாமல் சாலை நெடுக அரசியல் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீதும் எடுக்கலாமே ’சென்ராயன்’!
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS