‘நள்ளிரவில் காவலர்கள் செய்த செயல்’ ..சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு!

Home > News Shots > தமிழ் news
By |

சென்னையில் தள்ளுவண்டி கடை நடத்திக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவரின் கடையை உடைக்கும் காவலர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அப்துல் ரகுமான் என்பவர் இரண்டாம் ஆண்டு படிப்பை படித்து வருகிறார். இவர் பெரியமேடு பகுதியில் தள்ளுவண்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்ததும் பகுதி நேர வேலையாக இந்த கடையை நடத்தி வந்துள்ளார்.

இந்த தள்ளுவண்டி கடையின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு கல்லூரி படிப்பு மற்றும் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தனது தள்ளுவண்டி கடையை உடைத்துவிட்டதாக அப்துல் ரகுமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்துல் ரகுமான் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இரு காவலர்கள் அப்துல் ரகுமானின் தள்ளுவண்டி கடையை உடைக்கும் சிசிடிவி வீடியோவைக் கண்டு போலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த சிசிடிவி காட்சியில், நள்ளிரவில் இரு காவலர்கள் அப்துல் ரகுமானின் தள்ளுவண்டி கடைக்கு அருகில் சென்று கடையின் ஒரு பகுதியைப் பிடித்து இழுப்பது, கல் ஒன்றை எடுத்து தள்ளுவண்டி கடையின் மீது போட்டு உடைக்க முயற்சி செய்வது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனை அடுத்து தனது தள்ளுவண்டி கடையை உடைத்தது தொடர்பாக காவலர்களின் மீது விசாரணை நடத்த வேண்டும் என அப்துல் ரகுமான் போலிசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

STUDENT, POLICE, CHENNAI, CRIME

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES