கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளாவில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.வீடு,வாசல்களை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

 

இந்தநிலையில் நடிகர் நிவின்பாலி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ''கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் பிறந்தவன் என்பதிலும், அந்தக் கேரளா, இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதிலும் குழந்தைப் பருவத்தில் இருந்தே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன்; என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பேன்.

 

ஆனால், அந்த அழகிய கேரளா இன்று வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையான பாதிப்பில் இருக்கிறது. பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடைமையை இழந்து, வீடின்றி, உணவின்றி, அடிப்படை வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

 

என் மாநில மக்கள் நிலைமை, என் மனதைப் பிசைகிறது. இந்த நேரத்திலும் நம்பிக்கைக் கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது, என் தேசத்தின் ஒற்றுமை தான். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள், என் மாநிலத்தையும், மாநில மக்களையுடம் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன்.

 

இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்து, மீண்டும் ராஜநடை போடும் கேரளா என்பதில் ஐயமே இல்லை. ஆனால், உடனடியான தேவைகள் அவசியம் என்பதால்தான் இந்தக் கோரிக்கை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை உடனடியாகக் கேரளாவுக்கு அனுப்புங்கள்.

 

நீங்கள் யார் மூலமாக அனுப்புகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உடனடியாக வந்துசேர வேண்டும் என்பதுதான் நோக்கம். 'கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும்’ என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன், கைகூப்பி வேண்டுகிறேன்,'' என அவர் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | AUG 18, 2018 4:35 PM #KERALA #KERALAFLOOD #NIVINPAULY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS