இரட்டை தொனியில் பேசுவார்;நானும் பல சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்:அமலாபால்

Home > தமிழ் news
By |

திருட்டுப்பயலே 2 படப்பிடிப்பின் போது எனக்கும் சுசி கணேசன் தொந்தரவுகள் கொடுத்தார் என நடிகை அமலாபால் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்,ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அமலாபால் பதிவொன்றை இட்டிருக்கிறார்.

 

அதில் சுசி கணேசன் தனக்கும் சங்கடங்கள் கொடுத்ததாகவும், லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டுகளை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம், துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்குப் புரிகிறது.

 

சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் நாயகியாக நான் இருந்தாலும், அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

 

இதைவைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன். இந்தக் கொடுமையை, சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லியிருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

 

இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாதபடி, அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.

 

தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிஷ்டவசமானது.

 

இதுவே இந்தியர்களாகிய நாம், நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது. ஆன்மிகத் துறையிலும், கலைத் துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதேபோல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #MeToo குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

 

அரசாங்கமும் நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதக் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்டப் பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்,'' என தெரிவித்துள்ளார்.

#METOO, SUSIGANESAN, AMALAPAUL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS