தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே அவரது கணவனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிரியாலகுடாவை சேர்ந்தவர் பிரனாய் நாயக். இவர் அதே ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் என்பவரின் மகள் அமிர்தவர்ஷிணியை தீவிரமாக காதலித்து வந்தார்.

 

தொடர்ந்து அமிர்தவர்ஷிணியை திருமணம் செய்வதற்காக அவரது தந்தையான மாருதிராவிடம் சென்று பெண்கேட்டுள்ளார் பிரனாய்.ஆனால் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்வீட்டார் மறுத்துவிட்டார்கள்.இதனால் வேறுவழியில்லாமல் மாருதிராவ் மற்றும் அவரது வீட்டின் கடும் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்கள்.

 

இருவரும் உயர் படிப்பு படித்திருந்ததால் திருமணத்திற்க்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினர்.நிறுவனத்தின் அருகிலேயே வீடு எடுத்து தங்கி தங்களின் இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தி வந்தார்கள்.மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் சந்தோசத்தின் பயனாக அமிர்தவர்ஷிணி கர்ப்பம் அடைந்தார்.இதனால் இருவரும் சொந்த ஊருக்கு சென்றனர். அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக தனது மனைவியை பிரனாய் அழைத்து சென்றார். பரிசோதனை முடிந்து வீடு திரும்பும் போதுதான் அந்த கொடூர சம்பவம் நடந்தது.

 

பரிசோதனை முடிந்து கணவனும் மனைவியும் மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் போது மருத்துவமனை வளாகத்தில் மறைந்திருந்த மர்ம நபர் பிரனாய் நாயக் பின்னால் வந்து கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார்.கண்ணிமைக்கும் நேரத்தில் பிரனாயின் கர்ப்பிணி மனைவிக்கு முன் இந்த கொடூர சம்பவம் நடந்தது.கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் உடலை பார்த்து அமிர்தவர்ஷிணி கதறி அழுதார்.

 

சாதி, பொருளாதாரம்  ஆகியவற்றில் தன்னை விட குறைந்த பிரானாய் நாயக்கை அமிர்தவர்ஷிணி திருமணம் செய்து கொண்டதால் மாருதிராவ் கடும் கோபத்தில் இருந்ததாகவும் அவர் தான் கூலிப்படையை ஏவி இந்த படுகொலையை செய்திருக்க வேண்டும் என பிரானய் நாயக்கின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

 

தகவலறிந்த மிரியாளகுடா போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சிகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

BY JENO | SEP 15, 2018 1:33 PM #HONOUR KILLING #TELANGANA #PRANAY KUMAR #AMRUTA VARSHINI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS