கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முப்படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான கடற்படை ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிறந்த குழந்தை முதல்  மூதாட்டிகள் வரை கடற்படை வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்டு வருகின்றனர்.

 

முப்படையினரின் மீட்புப்பணி பாராட்டுக்குரிய வகையில் நடந்து வருகிறது. மீனவர்களும் தங்கள் படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரும் பங்காற்றி வருகின்றனர். இதற்கிடையே வெட்கக்கேடான ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

 

கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது வீட்டின் மொட்டை மாடியில் நின்ற இளைஞர் ஒருவர் தனது சட்டையை கழற்றி மீட்பு ஹெலிகாப்டரை நோக்கி சுழற்றியுள்ளார். இதைப் பார்த்த விமானி மிகுந்த சிரமத்திற்கிடையே  வீட்டின் மொட்டை மாடியின் அருகே ஹெலிகாப்டரை இறக்கினார்.

 

ஹெலிகாப்டர் அருகே வந்ததும் அந்த இளைஞர் தன் கையில்  இருந்த செல்போனை எடுத்து ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப் பார்த்த விமானி கடும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தார். பின்னர், அந்த இளைஞர் விமானியை நோக்கிச்  செல்லுமாறு கைக்காட்டியுள்ளார். ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்களின் மதிப்பு தெரியாத அந்த இளைஞரை எச்சரித்துவிட்டு விமானி ஹெலிகாப்டரை மீண்டும் மேலே எழுப்பி கிளப்பினார்.

 

கொஞ்சம்கூட மனிதத்தன்மை இல்லாமல் விமானியின் நேரத்தையும் உழைப்பையும் வீணடித்த அந்த நபரின் செயலை பலரும் கடுமையையாக கண்டித்துள்ளனர்.

BY JENO | AUG 20, 2018 4:25 PM #KERALAFLOOD #SELFIE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS