அறிஞர் அண்ணாவிற்கு பிறகு திமுக கலைஞருக்கும், அதிமுக கலைஞரின் நண்பர் எம்ஜிஆருக்கும் என்றானது.  எனினும் எம்ஜிஆரும் சரி, கலைஞரும் சரி அண்ணாவின் நாமத்தை பின்பற்ற தவறவில்லை. ஏறக்குறைய தனது எல்லா சினிமா படப் பாடல்களிலும் எம்ஜிஆர் ‘அண்ணா’வைப் பற்றிய வரிகளை வைக்கச் சொன்னார்.

 

குரு விஷயத்தில் கலைஞரும் சளைத்தவரல்ல. அண்ணாவைத் தொடர்ந்தே தன் கட்சியையும், கொள்கைகளையும் முன்னெடுத்தார். மொழிவழிக் கொள்கையுடன் சித்தாந்தத்தை உருவாக்கினார். தமிழ் ‘பண்பாட்டு அடையாள திரைப்படங்கள்’ என்று சொல்லப்படும் ’எத்னிக்’ திரைப்படங்களுக்கான கதை, வசனங்களை கலைஞர் புனைந்தார்.

 

1969-ம் ஆண்டு மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை என்கிற ‘அறிஞர்’ அண்ணாவின் திருவுடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. 15 மில்லியன் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய அந்த வரலாற்றுத் துயர் மிக்க இடம்தான் அண்ணா சதுக்கம்.  

 

அண்ணாவின் பேரால், அண்ணாவின் நாமத்தால் கட்சி நடத்தி, நாடாண்ட மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்கிற ‘டாக்டர்’ எம்ஜிஆர் முதல்வராக இருந்துபோது மறைந்தார். அண்ணாவின் அருகே 1987-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்டார்.

 

அதன் பின்னர் கலைஞருக்கு நிகரான அரசியலை மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா முன்னெடுத்தார். இருவரின் அரசியல் நாகரிகங்கள் அவர்கள் இருவரும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் வழி வந்தவர்கள் என்பதை நினைவூட்டின. கடந்த 2016-ம் வருடம் டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில், முதல்வர் பதவியில் இருக்கும்போதே மறைந்த ஜெயலலிதாவும், அண்ணா-எம்ஜிஆர் நினைவிடங்களின் அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

 

இன்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுடனான அரசியல் தொடர்பில் இருந்த இறுதி அரசியல் ஆளுமையான ‘டாக்டர்’, ‘கலைஞர்’ மு.கருணாநிதியும் மெரினாவில் இவர்களுக்கு அருகே, அரசமரியாதையுடன், தேசியக் கொடி போர்த்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறார்.

 

’இருவர்’ என்று எம்ஜிஆரையும் கலைஞரையும் குறிப்பிட்டால், அந்த இருவரில் ஒருவரான கலைஞர் எனும் தெற்கில் உதித்த சூரியன் கிழக்கில் (வங்கக்கடல் அருகே மெரினா கடற்கரை) மறைந்துள்ள நாளாக திராவிடக் கொள்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

BY SIVA SANKAR | AUG 8, 2018 5:34 PM #MKSTALIN #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #DMK #JAYALALITHAA #MGR #CNANNADURAI #KALAIGNARATMARINA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS