'சாப்பாடு ருசியா இருக்கு'.. சமையற்காரருக்கு உணவை ஊட்டிவிட்டு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த அமைச்சர்!

Home > தமிழ் news
By |

தான் சாப்பிட்ட உணவு மிகவும் ருசியாக இருந்ததால் அந்த உணவை சமையற்காரருக்கும் ஊட்டிவிட்டு, அவருக்கு ரூபாய் 25 ஆயிரம் டிப்ஸையும் அமைச்சர் ஒருவர் அளித்திருக்கிறார்.

 

கர்நாடகா மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஜமீர் அஹமது கான் சமீபத்தில் மங்களூர் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தனது நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் சாப்பிட போனார். அங்கு மீன் வகைகளை ஆர்டர் செய்து அமைச்சர் உட்பட அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

 

அந்த உணவுகளின் ருசியில் சொக்கிய அமைச்சர் ஜமீர் உடனடியாக இதனை சமைத்த சமையற்காரரை அழைத்து வாருங்கள் என கூற, ஹோட்டலைச் சேர்ந்தவர்கள் தலைமை சமையற்காரர் ஹனீப் அகமதுவை அழைத்து வந்து அமைச்சரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.

 

ஹனீப் அஹமதுவைப்  பார்த்த அமைச்சர்  தனது அருகில் அமரவைத்த தன்னுடைய தட்டில் இருந்த உணவை எடுத்து, அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார்.தொடர்ந்து தனது பாக்கெட்டில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்தார்.

 

மேலும் நீ ஹஜ் பயணம் சென்றுள்ளாயா? என அமைச்சர் கேட்க, பதிலுக்கு  ஹனீப் அஹமது இல்லை என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட அமைச்சர் நீ புனித ஹஜ் பயணம் செய்ய அனைத்து உதவிகளையும்  செய்கிறேன் என உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப் அஹமதுவின் விவரங்களை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

எதிர்பாராத இந்த நிகழ்வுகளால் மகிழ்ச்சியில் உறைந்த ஹனீப் இதுகுறித்து கூறுகையில்,'' இதற்குமுன் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் என முக்கிய தலைவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு என்னைப் பாராட்டியுள்ளனர். ஆனால் அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். என்னுடைய 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS