நம்மில் பலருக்கு ஒரு சிறு தொடுதல் பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. அன்பாக நமது அப்பாவோ அல்லது நமது சகோதரனோ நம்மை தொடும்போது அது எவ்வகையான தொடுதல் என்பது நமக்கு தெரியும்.அதேபோல் நாம் பேருந்திலோ அல்லது வெளியிடத்திலோ நாம் பயணம் செய்யும்போது நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நம்மை தொடும்போது அந்த தொடுதலில் அர்த்தமும் நமக்கு புரியும்.
ஆனால் இந்த தொடுதல் எல்லாம் ஒரு சிறுமிக்கோ அல்லது ஒரு சிறுவனுக்கோ அவ்வளவு எளிதாக புரிவதில்லை என கூறுகிறார் பள்ளி குழந்தைகளுக்கு 'குட் டச் பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் ஐபிஎஸ் அதிகாரி சரோஜ் குமாரி.
குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரின் காவல்துறை துணை ஆணையாளராக பணியாற்றி வருபவர் சரோஜ் குமாரி.இவர் தனது காவல் பணியோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு பாடங்களை நடத்தி வருகிறார். இதற்கென தனியாக ஒரு குழு அவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.Samajh Sparsh Ki (Understanding a Touch) தொடுதலை புரிந்துகொள்தல் என்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றகளைத் தடுக்கும் தனது முயற்சியை பல பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறார்.
இதற்காக சரோஜ் குமாரி தனது தலைமையில் 12 பேர் கொண்ட பெண் காவல்துறையினரை அமைத்துள்ளார்.அவர்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளை கையாள்வது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.இவர்கள் மூலம் 20 பள்ளிகளில் 2000 குழந்தைகளுக்கு மேல் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றது.
பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் இந்த வகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி,5 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு இந்த வகுப்பானது நடத்தப்படுகிறது.மேலும் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆசிரியர்களும் இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படுகிறது.
வீட்டிலிருந்து பெற்றோர் இதை ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.அதிகமாக குழந்தைகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுவது அந்த குழந்தைக்கு நன்கு அறிமுகமான நபர்களால்தான்.இதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,குழந்தைகள் இது குறித்து கூறும் பொது அதை மிகக் கவனமாக எடுத்து அதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து சரோஜ் ஐபிஎஸ் கூறுகையில், "இந்த விழிப்புணர்வு வகுப்பானது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை பயமுறுத்த அல்ல,சிறுவயதில் இதுபோன்ற சம்பவங்கள் அந்த குழந்தையின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.மேலும் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் கடுமையாக தண்டிக்கபடவேண்டும்,''என்றார்.
குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற வன்முறைகளுக்கெதிராக களமிறங்கி இருக்கும் சரோஜ் குமாரி ஐபிஎஸ்க்கு ஒரு ராயல் சல்யூட்!
OTHER NEWS SHOTS