‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்!

Home > தமிழ் news
By |

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெருமளவில் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக, தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான மாநாடு நடந்தது. குளோபல் இன்வெஸ்டர்ஸ் மாநாடு 2019 என்கிற பெயரில் சென்னை டிரேடு சென்டரில் நடந்த இந்த மாநட்டில் உலகம் முழுவதும் இருந்து தொழில் முனைவோர்கள் பலரும் வருகை புரிந்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் புதிய தொழில் தொடங்குபவர்கள், வளர்ந்த தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக விளம்பர ஸ்டால்கள் என களைகட்டியிருந்த இந்த மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடனான (MSME) புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.12,000 கோடிக்கும்,  EICHER நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.1,500 கோடிக்கும் கையெழுத்தாகியுள்ளது.

இதேபோல் பெரும் நிறுவனங்களான அதானி குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.10,000 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய்-உடனான ஒப்பந்தம் ரூ.7,000 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது.  MRF நிறுவனத்தை பொருத்தவரை,  ரூ.3,100 கோடிக்கும், பிஎஸ்ஏ நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்  ரூ.1,250 கோடிக்கும்  கையெழுத்தாகியுள்ளது.

இந்த முதலீடுகளால் தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கவுள்ளதாகவும், 10.50 லட்சம் இளம் பட்டதாரிகளுக்கும், அனுபவம் மிக்கவர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும் பல விதமான தொழில் நிறுவனங்களின் வருகையால், பல விதமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் இந்த மாநாடு உண்மையில் பெருவெற்றி பெற்றுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசியுள்ளார்.

இந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை தந்து பேசிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசுகையில், இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உறுதி கூறியதோடு, ரூ.3.41 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடு உறுதியானது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக தமிழகம் மிக அழகான மற்றும் தனக்கு நெருக்கமான மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

EDAPPADIKPALANISWAMI, GIM2019, TNGIM, TAMILNADU, CHENNAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS