சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது 91வது வயதில் நேற்று மும்பையில் காலமானார்.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்து சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.பிறகு 1950-ம் வருடம் இந்திய ஆட்சி பணி தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார்.ராஜாஜி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது அவருக்குக் கீழ் அன்னா ராஜம் பணியாற்றியுள்ளார்.

 

நேர்மைக்கும் அதிரடிக்கும் சொந்தக்காரரான அன்னா ஓசூரில் முதன்முதலாக உதவி  ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பில் இருக்கும் போது காட்டு யானைகள் ஊருக்குள் வந்து மக்களை அவ்வப்போது துன்புறுத்தி கொண்டிருந்தது.இதனால்  யானைகளை சுட்டு கொல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்தது.ஆனால் சுட்டுக்கொல்லும் உத்தரவை பிறப்பிக்க மறுத்தார். மாறாக யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையை எடுத்தார்.

 

தன்னுடன் பணியாற்றிய சக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.என் மல்கோத்ராவை திருமணம் செய்துகொண்டார்.அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரை பதவி வகித்தார்.இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ராஜாஜி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் அன்னா இணைந்து பணியாற்றி இருக்கிறார்.1982 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி எம்.பியாக இருந்தபோது அவருடன் பணியாற்றிய அவர், டெல்லியில் 1982-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.அன்னா ராஜமுக்கு 1989-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

 

‘பெண்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக சரியாக கையாள முடியாது என்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த அன்னா ’நிரூபிக்க வாய்ப்பே கொடுக்காமல் எப்படி இதை சொல்ல முடியும்?’ என அவரிடமே வாக்குவாதம் செய்ததாக பேட்டி ஒன்றில் அவரே குறிப்பிட்டிருந்தார்.

 

BY JENO | SEP 18, 2018 12:39 PM #FIRST WOMAN IAS OFFICER #ANNA RAJAM MALHOTRA IAS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS