‘பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடக் கூடாது’..வலியுறுத்தும் சிசிஐ!

Home > தமிழ் news
By |

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடக் கூடாது என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகளில் இருந்து பலத்த கண்டனங்கள் வந்தன. இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமான, கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா(சிசிஐ) அலுவலகம் உள்ளது. இங்கு தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானின் புகைப்படம், அவரை கவுரவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் சக வீரர்களுடன் இருக்கும் இம்ரான்கானின் மற்றொரு புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்ரான்கானின் இரு புகைப்படங்களும் சிசிஐ அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சிசிஐ கிளப்பின் செயலாளர் சுரேஷ் பாப்னா, ‘புல்வாமாவில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக் கூடாது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் சொல்ல வேண்டும்’ என கூறியுள்ளார்.

TEAMINDIA, BCCI, WORLDCUP2019, PAKISTAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS