'என்னுடைய பணியை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்'...ஐ.ஜி பொன் மாணிக்கவேல் உருக்கம்!
Home > தமிழ் newsநாளையுடன் தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் ஐ.ஜி பொன் மாணிக்கவேலிற்கு பிரிவு உபசார விழா சென்னை அயனவரத்தில் நடைபெற்றது.இதில் காவலர்கள் முன்பு மிகவும் உருக்கமாக பேசினார்.
சமீபத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியின் பெயர் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்.இவர் காட்டிய அதிரடிக்கு பின்பு தான்,தமிழ்நாடு காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்பு என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிந்தது.அந்த அளவிற்கு பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகளை மீட்டெடுத்தார். இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
பல நெருக்கடிகளை சந்தித்த அவர்,ரயில்வே ஐ.ஜி-யாக மற்றபட்ட போதும்,நீதிமன்றம்,சிலை கடத்தல் குறித்த வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது.
மேலும் கடும் முயற்சிக்கு பின்பு ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்தது,பொன் மாணிக்கவேலின் மிக பெரிய சாதனையாக கருதப்பட்டது.இந்தச் சிலையினை தஞ்சைப் பெரிய கோயிலுக்கு கொண்டு வந்த போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாக,அதனை சிறப்பித்தார்கள்.
இந்நிலையில் அவ்ரின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.இந்நிலையில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா சென்னை அயனாவரத்தில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் கலந்துகொண்ட ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சக காவலர்கள் மத்தியில் மிகுந்த உருக்கத்துடன் பேசினார்.
''காவலர்கள் குற்றம் நடந்தவுடன்,அந்தப் பகுதிக்கு சென்று முழுமையாக இறங்கி விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் உடனடியாகநீதிமன்றத்தை அணுகி குற்றவாளியை கைது செய்ய வேண்டும். உடனடியாக கைது செய்யக் கூடிய சம்பவங்கள் மற்றும் சட்டங்களை அறிந்து காவலர்கள் செயல்பட வேண்டும்.
யார் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவலர்கள் பயப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும் அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.காவலர்கள் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும்.எந்த இடத்திலும் பயப்பட கூடாது.குற்றங்களை கண்டுபிடிப்பதில் மிகவும் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
மேலும்,காவல்துறையினருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். எனக்கு பின்பு நேர்மையான அதிகாரிகள், இளைஞர்கள் என பல பேர் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் நம்பி நான் எனது பணியினை விட்டுச் செல்கிறேன்' என காவலர்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக பேசினார்.
கம்பிரமான மீசையும்,கணீரென்ற குரலுடன்,தவறு செய்பவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஐ.ஜி பொன் மாணிக்கவேலின் சேவை நிச்சயம் காவல்துறையில் ஒரு சகாப்தமே.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS