‘இந்தியாவ ஏத்துக்கவுமில்ல, எனக்குள்ள அந்த உணர்வும் இல்ல’... கௌசல்யா!

Home > தமிழ் news
By |

தான் இந்தியாவை ஏற்றுக்கொள்ளவில்லை, அந்த உணர்வும் தனக்குள் வரவுமில்லை என்று சமூக ஆர்வலர் கௌசல்யா பேசியிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்தவர் உடுமலையைச் சேர்ந்த பொறியாளர் ஷங்கர். இவரது மனைவி கௌசல்யா. ஷங்கரின் இழப்புக்கு பிறகு கௌசல்யா கலைப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியதோடு சமூக ஆர்வலராகவே மாறினார். பின்னர் நிமிர்வு தப்பாட்ட பயிற்சி கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அவர் பிபிசிக்கு ஒரு சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்துள்ளார்.

பிபிசி தமிழ் சேனலுக்கு கௌசல்யா அளித்துள்ள அந்த பேட்டியில், இந்தியாவை அம்பேத்கர் ஒரு யூனியனாகவே கருதுகிறார்.  தான் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயும் அப்படிதான் காண்பித்திருக்கிறார். அதோடு இந்தியாவில் ஒருமொழி தேசம் என்கிற ஒரு விஷயம் கிடையவே கிடையாது. இதே போல் பண்பாட்டு தளத்தை வைத்து பார்க்கும்போதும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். அப்படி இருக்க இதை எப்படி ஒரு தேசமாக கருதுவது என்கிற பார்வையை நான் மக்களிடமே விடுகிறேன்.

இதேபோல் தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரு மாநிலமாகக் கருதுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் நாட்டை ஒரு அடிமைப்படுத்தப்பட்ட மாநிலமாகவே இந்தியா வைத்திருக்கிறது. நான் இப்படிச் சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், நியூட்ரினோ திட்டத்துக்கான எதிர்ப்புப் போராட்டம், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றை  தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயலாகவே இந்தியா முன்மொழிந்துகொண்டும், அவற்றை செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறது.

இவற்றுக்கு எதிராக இவ்வளவு மக்கள் போராட்டங்களை நடத்தியும் அவற்றை இந்திய அரசு, வேண்டாம் என்று சொல்லி மறுக்கவேயில்லை. இதேபோல் விவசாயிகள் டெல்லிக்கே சென்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை காதுகொடுத்து கேட்காத மனநிலையில்தான் இந்திய அரசு இருக்கிறது. அதனால் நான் இந்தியாவை ஏற்றுக்கொள்ளவுமில்லை, அந்த உணர்வு எனக்குள் வரவுமில்லை என்று கூறியுள்ளார்.

INDIA, INTERVIEW, KOWSALYA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS