யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுகிறோமா?.. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Home > தமிழ் news
By |

கடந்த ஒரு வாரமாக ட்ரெண்டிங்கில் இருந்து வரும் கோவை சின்னதம்பி யானைக்கு ஆதரவளிக்கும் விதமாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, மருதமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 18 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த யானையின் பெயர்தான் சின்னத்தம்பி. அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களை சின்னத்தம்பி சேதப்படுத்துவதாகக் கூறி வனத்துறையினர் அதை இடம் மாற்ற எண்ணினர். இதனையடுத்து கோவை மாவட்டம்  பொள்ளாச்சிக்கு அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் சின்னத்தம்பியை இறக்கிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 3-ஆம் தேதி சின்னத்தம்பி யானை அங்கலக்குறிச்சி என்னும் கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து மீண்டும் வனத்திற்குள் சின்னத்தம்பியை வனத்துறையினர் துரத்தியுள்ளனர். ஆனால் தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதிக்கு சின்னத்தம்பி யானை வந்துள்ளது. கடந்த 3 நாள்களில் 100 கிலோ மீட்டருக்கும் மேலாக சின்னத்தம்பி பயணித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சின்னத்தம்பி உடுமலை ஆர்.கிருஷ்ணாபுரம் என்கிற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மயங்கி விழுந்துள்ளது.  இதுகுறித்து தெரிவித்த வனத்துறையினர், சின்னத்தம்பி மயங்கி விழவில்லை எனவும், வெகுதூரம் பயணித்ததால் சோர்வில் தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வனத்திற்குள் செல்லமறுக்கும் சின்னத்தம்பியை மீண்டும் கூண்டுக்குள் அடைத்து கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்னத்தம்பிக்கு ஆதரவாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் ‘வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது. தனது சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையைத் துன்புறுத்துவது போல, அதைக் கும்கியாக்குவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது. இரு யானைகளையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்’ என சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுருந்தார்.

இதனை அடுத்து யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை எனவும்,சின்னத்தம்பியை பத்திரமாக காட்டுக்குள் அனுப்புவதே அரசின் நோக்கம் எனவும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

CHINNATHAMBIELEPHANT, GVPRAKASH, INSTAGRAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS