‘கரூரை தாண்டி கூட போனதில்ல’.. ஸ்வீடன் செல்லும் அரசுப்பள்ளி மாணவன் நெகிழ்ச்சி!

Home > தமிழ் news
By |

தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும், அரசு மானிய பள்ளிகளிலும் இருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் இளம் விஞ்ஞானி திட்டம் போன்ற திட்டங்களை ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ளும்.

அவ்வகையில் அறிவியல், தொழில்நுட்பம், கலை-இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தனித்திறனுடைய 50 மாணவர்கள் தேர்வுகள் மூலம் இந்த கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனவரி 21-ஆம் தேதி பின்லாந்துக்கும், ஜனவரி 26-ஆம் தேதி ஸ்வீடனின் தலைநகருக்கும் சென்று அறிவியல் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார மையங்களை பார்வையிடுவதோடு, அங்குள்ள கல்விமுறை மற்றும் கருத்தரங்க கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுவிட்டு ஜனவரி 31 சென்னை திரும்பவுள்ளனர்.

இவர்களுள் கரூர் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் சதிஷ்குமாரின் உழைப்பில் உருவான சூரிய சக்தியில் இயங்கும் நவீனக் கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், தேனீ விவசாய பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கட்டுரையானது - பள்ளிக் கல்வித்துறை, தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா உள்ளிட்ட துறைகளின் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியின் மூலம்  தெரிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கட்டுரைக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்பட்டன. அவரின் இந்த கட்டுரையினால்தான் அவருக்கு ஸ்வீடன் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இம்மாணவரின் திறமைக்கு பள்ளியளவில் நடந்த பாராட்டு விழாவில், ஊரே கூடி வாழ்த்துச் சொல்லிய பிறகு அவ்விழாவில் பேசிய மாணவர் சதிஷ்குமார், ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தன்னை, தன் பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்கள் என்றும், இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டிச் செல்லவே வாய்ப்பு கிட்டாத தனக்கு தற்போது ஸ்வீடன், பின்லாந்து என்று வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம், தனது வழிகாட்டியான ஆசிரியர் தனபால், தலைமை ஆசிரியர் தமிழரசன் உள்ளிட்டவர்கள்தான் என்றும் கூறினார். மேலும் அப்துல் கலாம் போன்று ஒரு விஞ்ஞானி ஆக நினைக்கும் தனது லட்சியத்தின் முதல்படியாக இந்த பயணங்கள் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCHOOLSTUDENT, EDUCATION, YOUNG, SCIENTIST, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS