இன்றைய தேதியில் ஒட்டுமொத்த உலகமும் கூகுள் எனும் ஒரு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லலாம். லாரி மற்றும் செர்கோ எனும் இருவரால் உருவாக்கப்பட்ட கூகுளின் முதன்மை அதிகாரியாக நம்மூர் சுந்தர் பிச்சை இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த வளர்ச்சிவாதம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற சுந்தர் பிச்சை, சீனாவின் முக்கிய இணையதள பிரச்சனைகளைக் குறிப்பிட்டிருந்தார்.

 

முக்கியமாக சீன வளர்ச்சிவாதக் கொள்கை, நாட்டின் தனியுரிமை, அமைதி மற்றும் ஜனநாயக பாதுகாப்பு, மதவாத உரிமைகள், மனித உரிமைகள், சைபர் பாதுகாப்புகள் முதலானவற்றை கருத்தில் கொண்ட சீனா உலக இணையதள தேடுபொறியான கூகுளை பயன்படுத்துவதில் இருந்து முற்றிலும் விலகி உள்ளது. சாட்டிங் போன்ற தொடர்புகளுக்கு உள்நாட்டு சேவையான ‘வீ சாட்’  செயலியை சீனா பயன்படுத்தி வருகிறது. 

 

அதுமட்டுமல்லாமல், கூகுளின் முக்கியமான வீடியோ தளமான யூ-டியூப் பயன்படுத்துவதையும் தவிர்த்து வருகிறது. இதனால் வெளி உலகத்துடனான உலக தொடர்பு (குளோபல் காண்டாக்டேபிலிட்டி) சீனா துண்டித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக, சீனாவின் சமூக ஆர்வலர்கள் கருதுவதாக சீன நாட்டின் ஆவணப்படங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சீனவாசிகள் இந்த தனியுரிமைக் கட்டுப்பாட்டு போக்கினை எதிர்க்கவும் செய்கின்றனர்.

 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட கூகுள், சீனாவிற்கென பிரத்தியேகமான, சீன அரசு விரும்பாத இணையதளங்களையும், தரவுகளையும் தேடினால் கிடைக்காத அளவிற்கு தணிக்கை செய்யப்பட்ட கூகுளை உருவாக்கித் தருவதாகக் கூறியுள்ளது.

 

கூகுளின் இந்த முனைப்பு ஆரோக்கியமானதுதான் என்றாலும், அமெரிக்க ஐக்கிய அரசுகளின் சைபர் கண்காணிப்புகளில் இருந்து சுதந்திரம் பெறவும், சீனாவுக்குள் தொழிநுட்ப ஊடுருவல் நிகழ்வதைத் தடுக்கவும்தான் இத்தகைய முடிவினை சீனா எடுத்திருக்க வேண்டும் என்று உலக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் சீன அரசு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் பயன்பாட்டினை ஏற்பது பற்றிய நேரடியான பதிலையோ, விளக்கத்தையோ இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | AUG 3, 2018 4:32 PM #GOOGLE #CHINA #DOMESTICPRESENCE #SUNDARPICHAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS