‘சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்’.. உதவிக்கரம் நீட்டும் கிரிக்கெட் வீரர்கள்!

Home > தமிழ் news
By |

இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்ததால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், சிகிச்சைக்கான போதிய பணமில்லாமல் தவித்து வந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் தற்போதைய வதோதரா பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் மார்ட்டினுக்கு தற்போது 46 வயது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் அறிமுகமான இவர், 1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  2009-ம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர் 2016-2017-ஆம் ஆண்டு சீசனில் பரோடா(தற்போதைய வதோதரா) அணியின் பயிற்சியாளராக விளங்கியவர்.

நாளொன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை அவரது சிகிச்சைக்காக சுமார் 11 லட்சம் வரை செலவாகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 5 லட்ச ரூபாயும், பரோடா கிரிக்கெட் சங்கம்  2.70 லட்ச ரூபாயும் உதவித் தொகைகளை வழங்கியுள்ளன.

ஜேக்கப் பூரண நலம் பெறவேண்டி, கிரிக்கெட் வீரர் யூசஃப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலி, ஜேக்கப்புடன் விளையாண்ட தன் அனுபவங்களை பகிர்ந்ததோடு- ஜேக்கப்பின் குடும்பத்தினருக்கு தன்னாலான உதவிகளைச் செய்யவுள்ளதாகவும், தனித்துவிடப்பட்டதாக அவரது குடும்பம் கவலையுற வேண்டாம் என்றும் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். 

கங்குலியை போலவே ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசுப் பதான், இர்பான் பதான் உள்ளிட்ட வீரர்களும் சிகிச்சைக்காக போராடும் ஜேக்கப்பின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனல் பாண்டியா பிளாங்க் செக் ஒன்றைக் கொடுத்து சிகிச்சைக்குத் தேவையான பணம் எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளுங்கள் என்றும், குறிப்பாக 1 லட்சத்துக்கு குறைவாக நிரப்பக் கூடாது என்றும் கூறி நெகிழ வைத்துள்ளதாக பரோடாவின் முன்னாள் கிரிக்கெட் வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார். 

ACCIDENT, GANGULY, CRICKETER, HOSPITALISED, JACOBMARTIN, INDIA, EX-BARODA COACH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS