மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் அஞ்சலி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

இதில் நடிகர் ரஜினி பேசுகையில், ''கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி,பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்தபோது முதலமைச்சர் அங்கு சென்றிருக்க வேண்டாமா? தமிழக அமைச்சரவையே அங்கு பங்கேற்றிருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்ஜிஆரா?இல்லை ஜெயலலிதாவா? ஏன் போகவில்லை,'' என கேள்வி எழுப்பினார்.

 

இந்தநிலையில் நடிகர் ரஜினியின் கேள்விகளுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் ஜெயக்குமார் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில். ''எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லாத நிலையில் ரஜினி பேசுவது சந்தர்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. ஷூட்டிங்கும்,மீட்டிங்கும் ஒன்றாகி விடாது.ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை.நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறை அல்ல.

 

ரஜினியின் சந்தர்ப்பவாத அரசியல் இங்கு எடுபடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றில்லாமல் கருணாநிதிக்கு காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சியை முழு அரசியல்வாதியாக மாறுவதற்கு ரஜினி பயன்படுத்தியுள்ளார்.

 

எம்ஜிஆர்,ஜெயலலிதா இல்லாத நிலையில் ரஜினி இப்படி பேசுவது அவரின் சந்தர்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. எம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா?,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS