சென்னையானது தனது அழகை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழல்.சென்னையின் இயற்கை சூழலானது கடுமையாக பாதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அதிகப்படியான வாகன பெருக்கம்.

 

நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் சென்னையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், வாகனங்களின் நெருக்கத்தை கட்டுப்படுத்தவும் ‘சைக்கிள் ஷேரிங் என்னும் திட்டம் சென்னை மாநகராட்சியின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

 

லண்டன்,பாரீஸ்,நியூயார்க் போன்ற நகரங்களில் ‘சைக்கிள் ஷேரிங் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு அங்கு பொதுமக்களும் அதிக அளவில் பயனடைந்துவருகிறார்கள்.சென்னையில் இத்திட்டத்தை ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் செயல்படுத்த இருக்கின்றது.அந்த நிறுவனமானது சென்னையில் செயல்பட்டு வரும் தனது துணை நிறுவனம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

 

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அண்ணா நகர், மெரினா, பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் பல்வேறு ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். இதுபோன்ற மையங்களை திறக்க சென்னை முழுவதும் 440 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2 ஆயிரத்து 500 சைக்கிள்கள், ஜூன் மாதத்துக்குள் மேலும் 2 ஆயிரத்து 500 சைக்கிள்கள் என மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

 

இந்த சேவையை ஸ்மார்ட் போன் ஆப்  வழியாக பெற முடியும். அந்த ஆப் மூலமாக சைக்கிளை பூட்டவும், திறக்கவும் முடியும்.முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் தலா ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ரூ.49 செலுத்தி நாள் முழுவதும் சைக்கிளை பயன்படுத்தும் வசதி, நாளொன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.249, 3 மாதங்களுக்கு ரூ.699 கட்டணத்தில் பயன்படுத்தும் வசதிகளும் உள்ளன. இந்த கட்டணங்களுடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

 

இந்த சைக்கிள்களில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. அதனால் இந்த சைக்கிள்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிய முடியும். இத்திட்டத்தை காவல்துறையுடன் இணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எந்தெந்த இடத்தில் ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகள் இணைந்து விரைவில் முடிவு செய்யவுள்ளனர்.

BY JENO | SEP 10, 2018 10:40 AM #CHENNAI CORPORATION #CYCLE SHARING #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS