படியில் பயணம், நொடியில் மரணம் என்று சொல்வார்கள். சென்னையில் கடந்த சில நாட்களாகவே பள்ளி-கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை கண்டுவர முடிந்தது. அதில் சமீபத்திய மின்சார ரயில் விபத்து முக்கியமானது. ரயிலின் படி ஓரத்தில் பயணம் செய்த வாலிபர்கள் ரயிலின் பக்கவாட்டில் இருந்த சுவர்களில் இடித்து மளமளவென விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு ரயில்வே நிர்வாகமும் பொறுப்பு என்பதில் மறுப்பு இல்லை. இதே போல்  பட்டாக்கத்தியை சாலையில் உரசிக்கொண்டே வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து பயணிகள் உட்பட பலரையும் அச்சுறுத்தியதால் கடந்த வாரம் பெற்றோர்களிடம் அடிவாங்கிய வீடியோக்கள் வைரலாகின.

 

தினம்தினம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறை முனைப்பெடுத்து வருகிறது. எனினும் பெற்றோர்களின் அச்சத்தை போக்குவதற்காகவும், பேருந்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், ஓட்டுநர்-நடத்துனர்களுக்கு தொந்தரவு உண்டாவதைத் தடுக்கும் வகையிலும், கடந்த வாரமே, ‘பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் உட்பட யார் இடையூறாக இருந்தாலும் பேருந்தினை அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு கொண்டுவரவேண்டும்’ என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.

 

இதன்பேரில் இன்று காலை பேருந்து ஓட்டுநர் செய்த  காரியத்தை பலரும் பாராட்டினர். சென்னை கே.கே.நகர்- அசோக் பில்லர் சாலையில் தியாகராய நகருக்கு செல்லும் தடம் எண் 49 A என்கிற பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில் பள்ளி மாணவர்கள் சிலர் வரிசையாக பஸ் ஜன்னல்களில் தொங்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.  சிலர் பேருந்துகளின் அருகே ஓடிக்கொண்டும் இருந்தனர்.

 

அப்போது அவர்களிடம் சொல்லிப் பார்த்த டிரைவர், அவர்களை கண்டுகொள்ளாததுபோல் சிறிது தூரம் அமைதியாக பேருந்தினை ஓட்டிக்கொண்டு வந்து, திடீரென யாரும் எதிர்பாரத விதமாக உதயம் தியேட்டர் சிக்னலுக்கு முன்னிருந்த காவல் நிலையத்தை அணைத்தபடி நிறுத்தினார்.  சில நொடிகள் புரியாமல் விழித்த பள்ளி மாணவர்கள் விழித்துவிட்டு, சட்டென சுதாரித்து  அங்கிருந்து ஓட முயற்சிக்க, பஸ் டிரைவர் இறங்கி வந்து தடுத்து அவர்களை மறித்தார்.

 

பின்னர்  அங்குவந்த காவலர் அனைவரையும் கண்டித்தார்.  மாணவர்களின் பாதுகாப்பு மீது உள்ள அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு புரிதலை உண்டாக்கும் வகையில் இப்படி ஒரு செயலை செய்த பேருந்து டிரைவரை பலரும் பாராட்டினர். இளம் பிராயத்தில் துடிப்பாக இருக்கும் இந்த மாணவர்கள் செய்யும் விளையாட்டுக்கள் வினையானால் அவர்களின் எதிர்காலம் பற்றிய பதைபதைப்புகளுடன் இருக்கும் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தில் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய அந்த முகமறியா ஓட்டுநரை நாமும் பாரட்டுவோம்.

BY SIVA SANKAR | SEP 11, 2018 6:42 PM #COLLEGESTUDENTS #MTC #BUSDRIVER #BUSTRAVELLERS #FOOTBOARD #SCHOOLSTUDENTS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS